

சேலம் மாவட்ட எல்லையான தீவட்டிப்பட்டியை அடுத்த தொப்பூர் பேருந்து நிறுத்தம் அருகே சேலம் - பெங்களூரு சாலையில் நேற்று முன்தினம் இரவு சாலையைக் கடக்க முயன்ற முதியவர் மீது கன்டெய்னர் லாரி மோதியது. இதில், முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்நிலையில், அதே வழியில்நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரைச் சேர்ந்த பொன்மலை(60) என்பவர் ஓட்டி வந்த கார், ஏற்கெனவே விபத்துக்கு உள்ளாகி நின்ற கன்டெய்னர் லாரியின் பின்புறம் மோதியது. இதில், கார் தீப்பிடித்து எரிந்தது.
காரில் இருந்த பொன்மலை, அவரது மனைவி சகுந்தலா (58), அவர்களது மகள்கள் ஷோபனா(39), நித்யகுமாரி(29), ஷோபனாவின் மகன் மித்ரன்(5) ஆகியோரை அப்பகுதி மக்கள் மீட்டனர்.
இதில், காயம் அடைந்த பொன்மலை, அவரது மனைவி சகுந்தலா ஆகியோர் சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து வரும் வழியில் உயிர் இழந்தனர்.
நித்யகுமாரி பெங்களூரு மருத்துவமனையிலும், ஷோபனா, மித்ரன் ஆகியோர் கோவை மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர்.
தீவட்டிப்பட்டி போலீஸார், சேலம் எஸ்பி அபிநவ் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
பொன்மலை, ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பின்னர், ஓசூர் மீனாட்சி நகரில் வசித்து வந்ததும், குடும்பத்தினருடன் நாமக்கல்லுக்கு சென்றுவிட்டு திரும்பும்போது விபத்தில் சிக்கியதும் தெரியவந்தது.