

“பாராலிம்பிக் போட்டியில் இந்தமுறையும் எனது மகன் தங்கம் வெல்வார்” என சேலம் மாரியப்பனின் தாய், காணொலி மூலம் உரையாடிய பிரதமர் நரேந்திர மோடியிடம் நம்பிக்கை தெரிவித்தார்.
மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கும் பாராலிம்பிக் போட்டி வரும் 24-ம் தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தொடங்குகிறது. இப்போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொள்ளும் வீரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருடன் நேற்று பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் கலந்துரையாடினார்.
கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கம்வென்ற சேலம், பெரியவடுகம்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் இந்த ஆண்டு நடைபெறவுள்ள போட்டியிலும் பங்கேற்கவுள்ளார்.
தமிழக வீரரான மாரியப்பன் மற்றும் அவரது தாய் சரோஜா, சகோதரர்கள் குமார், கோபி ஆகியோருடன் நேற்று பிரதமர் மோடிகாணொலி மூலம் உரையாடினார்.
அப்போது, மாரியப்பன் தாய் சரோஜாவிடம், “பாராலிம்பிக்கில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த மாரியப்பன், இம்முறையும் வெற்றி பெற்று முன்னேற்றப் பாதையில் செல்ல குடும்பத்தினரின் பங்களிப்பு மிக அவசியம்” என்றார். மேலும், மாரியப்பன் விரும்பி உண்ணும் உணவுமுறைகள் குறித்து பிரதமர் கேட்டறிந்தார். இதற்கு பதில் அளித்த மாரியப்பனின் தாய் சரோஜா, “இந்த பாராலிம்பிக்கிலும் மாரியப்பன்நிச்சயம் தங்கம் வெல்லுவார் என்ற நம்பிக்கை மிகுதியாக உள்ளது. மாரியப்பன், நாட்டுக் கோழி, ஆட்டுக்கால் சூப்பை விரும்பி சாப்பிடுவார்” என்றார்.
தொடர்ந்து பேசிய பிரதமர், “நாட்டுக்கு நல்ல மகனை தந்ததற்கு நன்றி” என்றார். பின்னர் மாரியப்பனின் சகோதரர்கள் குமார்,கோபியிடம், “மாரியப்பனின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்ததோடு, மாரியப்பன் வருங்காலத்தில் நிகழ்த்தும் பல்வேறு சாதனைகளுக்கு நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்” என்று ேகட்டுக் கொண்டார்.