

கரூர் அருகே உள்ள செட்டிப்பாளையம் அமராவதி தடுப்பணையில் உள்ள பூங்காவை சீரமைக்கும் பணியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணியாளர்கள் 71 பேர் நேற்று ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் உள்ள வேப்ப மரத்தில் கூடு கட்டியிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட விஷ வண்டுகள் பறந்துவந்து, அவர்களை கடிக்கத் தொடங்கின.
இதனால் பணியாளர்கள் தப்பியோடினர். அவர்களை விஷ வண்டுகள் விரட்டிச் சென்று கடித்தன. இதில், அனைவரும் காயமடைந்த நிலையில், வேலை செய்யும் இடத்தில் இருந்து ஓட முடியாததால், ரெட்டிப்பாளையத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியான கார்த்தி (47) விஷ வண்டுகள் கடித்ததில் மயங்கி விழுந்தார்.
கரூர் தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைத்தனர். விஷ வண்டுகளுடன் அதன் கூடும் தீயிட்டு அழிக்கப்பட்டது.
இந்நிலையில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கார்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தாந்தோணிமலை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.