

தமிழகத்தில் வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு உட்பட மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீடு தொடர்பான சட்டம் கடந்த பிப்.26-ம் தேதி முதல்அமல்படுத்தப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இடைக்கால பட்ஜெட்டுக்கான பேரவை கூட்டத்தொடரில், கடந்தபிப்.26-ம் தேதி வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா கொண்டுவரப்பட்டுநிறைவேற்றப்பட்டது. அதன்படி,மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில்,வன்னியர்களுக்கு (எம்பிசி-வி)10.5 சதவீதம், சீர்மரபினருக்கு 7 சதவீதம், எஞ்சியுள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு 2.5 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது.இந்த சட்டத்துக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பிப்.28-ம் தேதிஒப்புதல் அளித்தார். இருப்பினும் இதை நிறைவேற்றுவது குறித்தஅறிவிப்பு வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் நேற்று கேள்வி எழுப்பியபோது, முதல்வர் முடிவு எடுத்து அறிவிப்பார் என்று தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, வன்னியர் இடஒதுக்கீடு முறையை அமல்படுத்துவது தொடர்பான அரசாணை நேற்று இரவு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அரசுப் பணி நியமனங்களிலும், கல்வி வாய்ப்புகளிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த இட ஒதுக்கீட்டுக்குள் வன்னியர், சீர்மரபினர், இதர மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு சிறப்பு ஒதுக்கீடு வழங்கி இந்த ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது.
சட்ட வல்லுநர்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துடன் கலந்துபேசி, இந்த சிறப்புஒதுக்கீட்டை கடந்த பிப். 26 முதல்செயல்படுத்துவதற்கான அரசாணையை முதல்வர் ஸ்டாலின்இன்று வெளியிட்டு ஆணையிட்டுள்ளார். இந்த ஆண்டு முதல்,தொழிற்கல்வி உள்ளிட்ட அனைத்து கல்வி சேர்க்கைகளும் மிகவும்பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான மேல்கூறப்பட்ட புதிய சிறப்பு ஒதுக்கீடு முறையின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முதல்வரின் இந்த அறிவிப்புக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் நன்றி தெரிவித்துள்ளார்.