மது கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் விடுவித்த - இன்ஸ்பெக்டர் உட்பட 6 போலீஸார் சஸ்பென்ட் : சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானதால் நடவடிக்கை

மது கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் விடுவித்த -  இன்ஸ்பெக்டர் உட்பட 6 போலீஸார் சஸ்பென்ட் :  சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானதால் நடவடிக்கை
Updated on
1 min read

மது பாட்டில்களை கடத்திச் சென்றவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யாமல் விடுவித்ததாக, திருத்துறைப்பூண்டி மதுவிலக்கு காவல் ஆய்வாளர் உட்பட 6 போலீஸாரை பணியிடை நீக்கம் செய்து தஞ்சை சரக டிஐஜி நேற்று உத்தரவிட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே ஆலத்தம்பாடியில் திருத்துறைப்பூண்டி மதுவிலக்கு போலீஸார் கடந்த மாதம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞர்கள், தங்களின் உடல் முழுவதும் புதுச்சேரி மதுபானப் பாட்டில்களை கட்டிக்கொண்டு, கடத்திச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை அழைத்துச் சென்று விசாரணை நடத்திய போலீஸார், அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அனுப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஆலத்தம்பாடியில் அந்த 2 இளைஞர்களிடமும் போலீஸார் சோதனை செய்தபோது, அங்கிருந்த ஒருவர் எடுத்த வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

இதையடுத்து, அந்த சம்பவம் குறித்து எஸ்பி சீனிவாசன்விசாரணை நடத்தினார். இதில், இளைஞர்கள் மது பாட்டில்களை கடத்திச் சென்றதும், அவர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்யாமல் விடுவித்ததும் உறுதியானது.

இதையடுத்து, எஸ்பி சீனிவாசன் பரிந்துரையின்பேரில், திருத்துறைப்பூண்டி மதுவிலக்கு காவல் ஆய்வாளர் ஞானசுமதி, உதவி ஆய்வாளர் வரலட்சுமி, தலைமைக் காவலர்கள் சண்முகநாதன், ராஜா, முதல்நிலை காவலர்கள் பாரதிராஜன், விமலா என அந்தக் காவல் நிலையத்தில் பணியாற்றிய 6 பேரையும் பணியிடை நீக்கம் செய்து, தஞ்சை சரக டிஐஜி பிரவேஷ்குமார் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in