

மூத்த தமிழறிஞரும், சொற்பொழிவாளருமான முனைவர் சோ.சத்தியசீலன் நேற்று முன்தினம் இரவு காலமானார்.
பெரம்பலூரைச் சேர்ந்த முனைவர் சோ.சத்தியசீலன்(88) கடந்த சில ஆண்டுகளாக திருச்சி டிவிஎஸ் டோல்கேட் சேதுராமன் பிள்ளை காலனியில் வசித்து வந்தார். மூத்த தமிழறிஞரும், இலக்கிய சொற்பொழிவாளருமான இவர், கல்லூரி பேராசிரியர் மற்றும் முதல்வராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் பாரதிதாசன் பல்கலைக்கழக பாடத்திட்டக் குழு தலைவர், ஆட்சிக்குழு உறுப்பினர், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக திட்டக் குழு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளை வகித்தவர்.
நேரு வழி நேர்வழி, அழைக்கிறது அமெரிக்கா, திருக்குறள் சிந்தனை முழக்கம் உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார். தமிழக அரசின் கலைமாமணி விருதும், சொல்லின் செல்வர் பட்டமும் பெற்றவர். குன்றக்குடி அடிகளார் இவருக்கு ’நாவுக்கரசர்’ என்ற பட்டத்தை வழங்கியுள்ளார்.
இந்நிலையில், வயது மூப்பு காரணமாக நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இவரது உடல் நேற்று மாலை உய்யக்கொண்டான் கரையில் உள்ள மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்துக்கு அருகே அடக்கம் செய்யப்பட்டது.
இவரது உடலுக்கு திருச்சி சிவா எம்பி, இனிகோ இருதயராஜ் எம்எல்ஏ, புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்து உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். இவருக்கு மனைவி தனபாக்கியம், மருத்துவரான மகள் சித்ரா ஆகியோர் உள்ளனர்.