Published : 29 Jun 2021 06:12 AM
Last Updated : 29 Jun 2021 06:12 AM
விருத்தாசலம் அரசு ஆண்கள்மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு நேற்று வழங்கப்பட்ட புத்தகப் பையில் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, பழனிசாமி ஆகியோரது படங்கள் இடம் பெற்றிருந்தன.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நேற்று புத்தகங்கள் வழங்கும் பணி தொடங்கியது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன. அப்போது, கடந்த கல்வி ஆண்டுகளைப் போலவே புத்தகங்களுடன் பைகளும் சேர்த்து வழங்கப்பட்டன.
அந்தப் பைகளில் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, பழனிசாமி ஆகியோரது உருவங்கள் இடம்பெற்றிருந்தன. அதைப் பார்த்த பலர் ஆச்சர்யமடைந்தனர்.
இதுகுறித்து கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரோஸ் நிர்மலாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
புத்தகங்களை மட்டுமே வழங்க உத்தரவிட்டிருக்கிறோம். பையோஅல்லது இதர உபகரணங்களோ வழங்கக் கூடாது என அந்தந்தபள்ளித் தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும் பைகள் வழங்கப்பட்டிருக்கிறதா என விசாரித்து, வழங்கப்பட்டிருந்தால் உடனடியாக அவை திரும்பப் பெறப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
“எந்தத் தலைவர்களின் படம் இடம்பெற்றிருந்தால் என்ன! புத்தகங்களுடன் பைகளை வழங்கியிருக்கின்றனர். கடந்த முறை விநியோகத்தில் மீதம் இருந்ததை தந்திருக்கிறார்கள். ஆட்சி மாறியதால் அதை பயன்படுத்த வேண்டாம் என்று நினைக்காமல் அதை அப்படியே வழங்கியதும் ஒரு நல்ல நிர்வாக நடைமுறைதான்” என்று மாணவர்களின் பெற்றோரில் சிலர் தெரிவித்தனர்.
ஆனாலும், சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள் ‘கவனக்குறைவாக வழங்கிவிட்டோமோ? அதனால் தங்களுக்கு ஏதேனும் நெருக்கடி வருமோ’ என்று அச்சத்தில் உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT