

மதுக்கடைகள் திறப்பைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பாமக சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகம் குறைந்தபட்சம் கரோனா பிடியிலிருந்து மீளும் வரையிலாவது மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் என்று பாமக உள்ளிட்ட மக்கள் நலனில் அக்கறை உள்ள அனைவரும் பலமுறை வலியுறுத்தியும் கூட,அனைத்தையும் புறக்கணித்துவிட்டு 27 மாவட்டங்களில் மதுக்கடைகளை திறந்து மிகப்பெரிய தீங்கை இழைத்திருக்கிறது திமுக அரசு.
தமிழகத்தில் மதுக்கடைகளை திறப்பதற்காக முதல்வர் பல்வேறு காரணங்களைக் கூறியிருக்கிறார். கரோனா குறைந்துவிட்டதால்தான் மதுக்கடைகளை திறக்கிறோம் என்று முதல் நாளிலும், கள்ள மது விற்பனை யைத் தடுப்பதற்காகத் தான்மதுக்கடைகள் திறக்கப்படுவதாக அடுத்த நாளிலும் தெரிவிக்கிறார். இவை எதுவுமே உண்மை இல்லை என்பது அவரது மனசாட்சிக்கே தெரியும்.
தமிழகத்தில் கரோனா காலத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதைக் கண்டித்தும், மதுக்கடைகளை நிரந்தரமாக மூடி முழுமதுவிலக்கை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும் பாமக சார்பில் வரும் 17-ம் தேதி (நாளை) காலை 11 மணிக்கு மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
பாமக மூத்த தலைவர்களும், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை நிர்வாகிகளும் தங்களின் வீட்டு வாசலில், கரோனா பாதுகாப்பு விதிகளைக் கடைப்பிடித்து, 5 பேருக்குமிகாமல் கூடி, மதுவுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும், கறுப்புக் கொடியையும் ஏந்தி முழக்கமிட்டு போராட்டம் நடத்துவார்கள்.
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
நிவாரண நிதியை பறிக்கும் அரசு
இதுதொடர்பாக அவர் தனதுட்விட்டர் பதிவில், ‘‘தமிழகத்தில் ஜூன் 14-ம் தேதி ரூ.165 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது. கரோனா நிதியுதவியாக ரூ.4,200 கோடியை தமிழக அரசு வழங்கவுள்ளது. தினசரி ரூ.165 கோடிக்கு மது விற்றால் ஒருமாதத்தில் ரூ.5 ஆயிரம் கோடியை மக்களிடமிருந்து மதுவைக் கொடுத்து அரசு பறித்துக் கொள்ளும். ஒரு கையால் கொடுத்து மறு கையால் பறிப்பது என்ன நியாயம்’’ என்று தெரிவித்துள்ளார்.