வறுமையிலும் கரோனா நிவாரண நிதிக்கு நகை வழங்கி - முதல்வரை நெகிழவைத்த பட்டதாரி பெண்ணுக்கு தனியார் நிறுவனத்தில் பணி ஆணை :

மேட்டூரை அடுத்த பொட்டனேரி கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரிப் பெண் சவுமியாவுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்பாட்டில் தனியார் நிறுவனத்தில் பணி வழங்கி அதற்கான ஆணையை அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார். உடன் ஆட்சியர் கார்மேகம், முன்னாள் அமைச்சர் செல்வகணபதி உள்ளிட்டோர்.
மேட்டூரை அடுத்த பொட்டனேரி கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரிப் பெண் சவுமியாவுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்பாட்டில் தனியார் நிறுவனத்தில் பணி வழங்கி அதற்கான ஆணையை அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார். உடன் ஆட்சியர் கார்மேகம், முன்னாள் அமைச்சர் செல்வகணபதி உள்ளிட்டோர்.
Updated on
1 min read

டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்து வைப்பதற்காக, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 12-ம் தேதி மேட்டூருக்கு வந்தார். அப்போது, மேட்டூரில் பொறியியல் பட்டதாரியான (கணினி அறிவியல்) ஆர்.சவுமியா என்ற பெண் முதல்வரை சந்தித்து மனு அளித்தார்.

பணி ஓய்வுபெற்ற தந்தை ராதாகிருஷ்ணனுடன் சொற்ப ஓய்வூதியத்தில் வசிப்பதாகவும், தனது கிராமத்தின் அருகே தனியார் துறையில் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தால் உதவியாக இருக்கும் என்றும் மனுவில் கூறியிருந்தார். மேலும், மனுவுடன் 2 பவுன் தங்கச் சங்கிலியை வைத்து, கரோனா நிவாரண நிதிக்கு வழங்குவதாகவும் சவுமியா குறிப்பிட்டிருந்தார்.

கோரிக்கை மனுவைப் படித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், சமூக வலைதளங்கள் மூலமாக, சவுமியாவைப் பாராட்டியதுடன், பொன்மகளுக்கு உரிய வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உள்ளிட்டோர், மேட்டூரை அடுத்த பொட்டனேரியில் வசிக்கும் சவுமியாவின் வீட்டுக்கு நேரில் சென்று, அவரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, மேட்டூர் அருகே உள்ள ஜேஎஸ்டபிள்யு என்ற தனியார் நிறுவனத்தில் பணிபுரிவதற்கான பணி ஆணையை வழங்கினர்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் செல்போன் மூலம் தொடர்புகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், சிறப்பாக பணிபுரிய வேண்டும் என்று சவுமியாவுக்கு வாழ்த்து கூறினார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி,ஆட்சியர் கார்மேகம், முன்னாள்அமைச்சர் செல்வகணபதி உள்ளிட்டோரும் சவுமியாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in