Published : 16 Jun 2021 03:12 AM
Last Updated : 16 Jun 2021 03:12 AM
எழுத்தாளர் தி.ஜானகிராமனின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டுதொகுக்கப்பட்டுள்ள ‘ஜானகிராமம்’ என்ற நூலை முதல்வர் ஸ்டாலின், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் நேற்று மாலை வெளியிட்டார்.
முதல் பிரதியை தி.ஜானகிராமனின் மகள் உமாசங்கரி சார்பாக ‘விப்ராஸ் ஆட்ஸ்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கெஜலஷ்மி ரகு பெற்றுக்கொண்டார். நூலின் தொகுப்பாசிரியர் கல்யாணராமன், நந்தனம் கல்லூரி தமிழ்த் துறை பேராசிரியர் முனைவர் சீதாபதி ரகு, கிண்டி செல்லம்மாள் மகளிர் கல்லூரி தமிழ்த் துறை பேராசிரியர் முனைவர் தா.அ.சிரிஷாராமன், பத்திரிகையாளர் சுந்தரபுத்தன் ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது முதல்வர், ‘‘தமிழின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் தி.ஜானகிராமன். அவரது படைப்புகள் காலத்தை வென்று வாழும் திறன் உடையவை. அவரதுபடைப்புகள் குறித்து பல்வேறுதுறைகளைச் சேர்ந்தவர்களால் எழுதப்பட்ட இந்நூலை வெளியிடுவதில் பெருமையடைகிறேன். தி.ஜானகிராமன் நூற்றாண்டு விழாவை முன்னெடுக்கும் அனைவருக்கும் எனது நன்றிகள்’’ என்று குறிப்பிட்டார்.
ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில், மன்னார்குடி அருகில் உள்ள தேவங்குடி என்ற கிராமத்தில் தியாகராஜ சாஸ்திரி - நாகலட்சுமி தம்பதியின் மகனாக 28-06-1921ல் பிறந்தவர் தி.ஜானகிராமன். கடந்த 1982-ல் அவர் காலமானார். அவர் மறைந்து 39 ஆண்டுகளாகி விட்டபிறகும், நவீன தமிழ் இலக்கியத்தில் அவர் புகழ் இன்றும் ஓங்கியேஇருக்கிறது. அவரது புனைகதைகள், தமிழ் வாசகர்களால் இன்றும் விரும்பி வாசிக்கப்படுகின்றன.
சாகித்ய அகாடமி விருது பெற்ற அவரது நூற்றாண்டு நிறைவை சிறப்பிக்கும் நோக்கில், தி.ஜா. ஆய்வாளரும், ராமேசுவரம் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அரசுக் கல்லூரி முதல்வருமான கல்யாணராமன், பல்வேறு எழுத்தாளர்களிடம் இருந்து தி.ஜானகிராமனின் படைப்புகளைப் பற்றிய கட்டுரைகளைப் பெற்று, ‘ஜானகிராமம்’ என்ற தலைப்பில், 1,032 பக்கங்களில் ஒரு பெருநூலைத் தொகுத்துள்ளார். இந்நூலை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT