Published : 14 Jun 2021 03:12 AM
Last Updated : 14 Jun 2021 03:12 AM
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் ஒரு இடத்தில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்காக மத்திய அரசு வெளியிட்டுள்ள ஒப்பந்த அறிவிப்புக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 1992-ம் ஆண்டில் கறம்பக்குடி ஒன்றியத்தில் 7, திருவரங்குளம் ஒன்றியத்தில் 1 என மொத்தம் 8 இடங்களில் ஓஎன்ஜிசி மூலம் தலா 12,000 அடி ஆழத்துக்கு ஆழ்துளை கிணறு அமைத்து, எரிபொருள் சோதனை நடத்தப்பட்டது.
அதில், கருக்காகுறிச்சி வடதெரு, நெடுவாசல் அருகே நல்லாண்டார் கொல்லை,புள்ளான்விடுதி ஆகிய இடங்களில் நிலத்தடியில் இருந்து எரிபொருள் எடுப்பதற்கான அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. மற்ற இடங்கள் மூடப்பட்டன.
எனினும், அனைத்து இடங்களிலும் விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு ஆண்டுக்கு ஏக்கருக்கு ரூ.90 ஆயிரம் வீதம் மத்திய அரசு வழங்கி வருகிறது.
இந்நிலையில், 2017-ல் அறிவிக்கப்பட்ட நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து பல்வேறு கட்டங்களாக 200 நாட்கள் போராட்டம் நடத்தப்பட்டதையடுத்து, இத்திட்டத்தை கைவிடுவதாக மத்திய, மாநில அரசுகள் அறிவித்தன.
அதன்பிறகு, தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதிகளான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களும், கடலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் குறிப்பிட்ட பகுதிகளும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்கப்பட்டன.
இதனால், இந்தப் பகுதியில் விவசாயத்துக்கு எதிரான எந்தத் திட்டமும் செயல்படுத்தப்படாது என விவசாயிகள் நம்பியிருந்த நிலையில், கறம்பக்குடி வட்டம் கருக்காகுறிச்சி வடதெரு உட்பட நாடு முழுவதும் 75 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஒப்பந்த அறிவிப்பை மத்திய அரசு 2 நாட்களுக்கு முன்பு வெளியிட்டது.
இதுகுறித்து அறிந்த அப்பகுதி விவசாயிகள், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எம்.கே.ஆரோக்கியசாமி தலைமையில் கருக்காகுறிச்சி வடதெருவில் எரிபொருள் பரிசோதனை செய்யப்பட்ட இடத்தில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நெடுவாசல் போராட்டக் குழுவினர் சிலரும் அங்கு வந்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.
மேலும், அந்த இடத்தில் கறம்பக்குடி வட்டாட்சியர் விஸ்வநாதன், கிராம நிர்வாக அலுவலர் அம்பிகாபதி உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். வடகாடு போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், அங்கு வந்த விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் பி.ஆர்.பாண்டியன், செய்தியாளர்களிடம் கூறியது: வேளாண் பாதுகாப்பு மண்டலத்தில் இயற்கை எரிவாயு, மீத்தேன், ஹைட்ரோகார்பன், ஷேல் காஸ் எடுப்பது போன்ற விவசாயத்துக்கு எதிரான எந்தப் பணிகளும் மேற்கொள்ளப்படாது என்று கடந்த ஆண்டு பிப்.25-ம் தேதி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இந்த ஆணைக்கு எதிராக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டும்.
தமிழக அமைச்சரவையைக் கூட்டி இத்திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் ரத்து செய்ய வேண்டும். நெடுவாசல் போராட்டக் குழு உறுப்பினராக இருந்த தற்போதைய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், அரசு நல்ல முடிவை எடுக்க வலியுறுத்துவார் என நம்புகிறோம் என்றார்.
இதுதொடர்பாக, ஆதனக்கோட்டையில் திருச்சி எம்.பி சு.திருநாவுக்கரசர் கூறும்போது, "ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஏற்கெனவே இருந்த அதிமுக அரசும் எதிர்த்தது. தற்போதுள்ள திமுக அரசும் எதிர்க்கிறது. மக்கள் விரும்பாத எந்தத் திட்டத்தையும் நிறைவேற்ற முடியாது. எனவே, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் இத்திட்டத்தை அறிவித்திருப்பதை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்" என்றார்.
இதுதொடர்பாக, மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:
தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் மேம்பாட்டு சட்டம் நடைமுறையில் இருக்கும் போதே, காவிரிப் படுகையில் எண்ணெய் , எரிவாயு, ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க ஒப்பந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிடுவது தமிழக அரசு இயற்றியுள்ள சட்டத்தை அவமதிப்பதாகும். இதிலிருந்து காவிரிப் படுகை பகுதியை கைவிட வேண்டும். தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, காவிரிப் படுகை முழுவதையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT