

மேட்டூர் அணையை திறப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 12-ம் தேதி சேலம் மாவட்டம் சென்றிருந்தார். அப்போது பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களில், இரா.சவுமியா என்பவர் அளித்த கடிதத்தை முதல்வர் படித்துப் பார்த்து நெகிழ்ந்துபோனார்.
அக்கடிதத்தில் சவுமியா கூறியிருந்ததாவது: நான் பி.இ. கணினி அறிவியல் பட்டதாரி. தந்தை ஆவின் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். எனது தந்தை பணியில் இருந்து பெற்ற சம்பளத் தொகை அனைத்தையும் எங்களை படிக்க வைக்கவும், என் மூத்த சகோதரிகள் 2 பேருக்கு திருமணம் செய்யவும் செலவு செய்துவிட்டார். நாங்கள் 3 பெண்களும் பட்டதாரிகள்.
ஆனால், வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. தந்தை ஓய்வுபெற்ற சில மாதங்களில், என் தாய்க்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டது. நுரையீரல் பழுதடைந்து கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தந்தை தனது சேமிப்பு பணம் அனைத்தையும் அம்மாவின் மருத்துவத்துக்காக செலவு செய்தார். மருத்துவச் செலவு ரூ.13 லட்சம் ஆனபோதிலும், அம்மாவை காப்பாற்ற முடியவில்லை. அவர் சிகிச்சை பலனின்றி கடந்த ஆண்டு மார்ச் 12-ம் தேதி காலமாகிவிட்டார்.
எங்களுக்கு சொந்த வீடு கிடையாது. அம்மா மறைந்த பிறகு, மேட்டூரில் குடியிருந்த வாடகை வீட்டை காலி செய்துவிட்டு, தந்தை பிறந்த கிராமத்துக்கு வந்து வாடகை வீட்டில் தங்கியுள்ளோம்.
தந்தைக்கு பணி ஓய்வுத் தொகையாக ரூ.7 ஆயிரம் கிடைக்கிறது. வீட்டு வாடகை ரூ.3 ஆயிரம் போக, ரூ.4 ஆயிரத்தை வைத்து குடும்பம் நடத்துகிறோம். திருமணமான சகோதரிகளும் எங்களுக்கு உதவும் வசதி வாய்ப்பு இல்லை. அதனால் மிகவும் சிரமப்படுகிறோம். எனக்கு அரசு வேலை வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை.
ஒரு தாயாக இருந்து உதவுங்கள்..
இந்த மனுவுடன், கரோனா நிதிக்காக தனது 2 பவுன் செயினையும் அவர் வழங்கினார். ‘‘பணம் இல்லாததால், கழுத்தில் இருந்த 2 பவுன் செயினை கரோனா நிவாரண நிதியாக வழங்குகிறேன்’’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் நெகிழ்ந்துபோன முதல்வர், பி.இ. பட்டதாரியான சவுமியாவுக்கு வேலை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.
அவர் தனது முகநூலில், “மேட்டூர் அணையை திறக்கச் சென்றபோது பெறப்பட்ட மனுக்களில் சகோதரி சவுமியாவின் கடிதம் கவனத்தை ஈர்த்தது. பேரிடர் காலத்தில் கொடை உள்ளத்தோடு உதவ முன்வந்த அவரது எண்ணம் நெஞ்சத்தை நெகிழ வைக்கிறது. பொன்மகளுக்கு விரைவில் அவரது படிப்புக்கேற்ற வேலை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று பதிவிட்டுள்ளார். அத்துடன், சவுமியா அளித்த 2 பவுன் தங்க செயினின் புகைப்படத்தையும் முதல்வர் பகிர்ந்துள்ளார்.