Published : 11 Jun 2021 03:13 AM
Last Updated : 11 Jun 2021 03:13 AM

எதிர்க்கட்சி துணைத் தலைவர், கொறடா யார்? - அதிமுக எம்எல்ஏக்கள் 14-ம் தேதி ஆலோசனை : நிர்வாகிகள், தொண்டர்களுக்கு அனுமதி இல்லை

எதிர்க்கட்சி துணைத் தலைவர், அதிமுக கொறடா யார் என்பதைமுடிவு செய்வதற்காக அக்கட்சியின் எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம்வரும் 14-ம் தேதி நடக்கிறது.

தமிழக எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் முதல்வர் பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். எதிர்க்கட்சி துணைத் தலைவர், அதிமுக கொறடா யார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:

அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம், 14-ம் தேதி பகல் 12 மணிக்கு கட்சித் தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடக்கும்.

இதில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அளித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளியை கடைபிடித்தும், முகக் கவசம் அணிந்தும் பங்கேற்க வேண்டும். அனைவரும் எம்எல்ஏக்களுக்கான அடையாள அட்டை அணிந்து வரவேண்டும்.

நிர்வாகிகள், தொண்டர்கள் அதிமுக தலைமை அலுவலகம் வருவதை தவிர்க்க வேண்டும். அலுவலகத்துக்குள் பேரவை உறுப்பினர்கள் தவிர வேறு யாரையும் அனுமதிக்க இயலாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிமுகவை பொருத்தவரை கட்சிப் பதவியை ஓ.பன்னீர்செல்வம் முக்கியமாக கருதுவதால், பேரவையில் எந்தப் பதவியையும் அவர் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. துணைத் தலைவர், கொறடா பதவிக்கு மூத்த எம்எல்ஏக்கள் பலர் போட்டியில் உள்ளனர். கொறடாவாக கே.பி.முனுசாமி அல்லது கே.பி.அன்பழகன் ஆகிய இருவரில் ஒருவர் தேர்வு செய்யப்படலாம் என தெரிகிறது.

தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் இக்கூட்டத்துக்கான ஒப்புதல் கோரி டிஜிபி மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் நேற்று முன்தினம் அதிமுகசார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x