Published : 11 Jun 2021 03:13 AM
Last Updated : 11 Jun 2021 03:13 AM

தமிழகத்தில் பேரிடர் காலத்துக்கு தேவையான - அனைத்து வகையான மருந்துகளும் கையிருப்பு : சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் பேரிடர் காலத்துக்கு தேவையான அனைத்து வகையான மருந்துகளும் கையிருப்பில் உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழகத்தில் பேரிடர் காலத்துக்கு தேவையான அனைத்து வகையான மருந்துகளும் மருத்துவப் பணிகள் கழகத்திடம் கையிருப்பில் உள்ளன. தொடக்கத்தில் ரெம்டெசிவிர் மருந்துக்கு பெரிய அளவில் தட்டுப்பாடு இருந்தது. தற்போது அதன் விநியோகத்தில் இருந்த சிறு சறுக்கல்கள் எல்லாம்சரிசெய்யப்பட்டு, சுமார் 9.5 லட்சம் மருந்துகள் வாங்கப்பட்டுள்ளன. இதில் 5 லட்சம் மருந்துகள் அரசுமருத்துவமனைகளுக்கும், எஞ்சியவை தனியார் மருத்துவமனைகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன. இப்போது 2.91 லட்சம் மருந்துகள் கையிருப்பில் உள்ளன.

கவச உடை, முகக் கவசங்கள்

4 வாரங்களுக்கு தேவையான அளவுக்கு 3.5 லட்சம் முழு கவச உடைகள், 15 லட்சம் என்-95 முகக் கவசங்கள், 75 லட்சம் மூன்றடுக்கு முகக் கவசங்கள் கையிருப்பு உள்ளன.

கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்காக 9,500 ஆம்போடெரிசின் மருந்துகள் கையிருப்பில் உள்ளன.

இதற்கு மாற்று மருந்தாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) வழிகாட்டுதலின்படி 90 ஆயிரம் பொசக்னாசோல் மாத்திரை கொள்முதல் செய்ய பணம் செலுத்தப்பட்டு, இதுவரை 42 ஆயிரம் பெறப்பட்டுள்ளது. அதில் 39,500 மாத்திரைகள் கையிருப்பில் உள்ளன.

பொசக்னாசோல் ஊசி மருந்தை பொருத்தவரை 7 ஆயிரம் மருந்துகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு, 4 ஆயிரம் மருந்துகள் வந்துள்ளன.

எச்ஐவி நோயாளிகள்

தமிழகத்தில் 1.20 லட்சம் பேர் எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். அவர்கள் அனைவரும் 55 கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்கள் மூலம் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

வரும் 21-ம் தேதி முதல், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக இந்தியாவில் உள்ள 7 நிறுவனங்களில் இருந்து 75 சதவீத தடுப்பூசியை மத்திய அரசே கொள்முதல் செய்து, மாநில அரசுகளுக்கு பிரித்து வழங்கும் என்று பிரதமர் அறிவித்துள்ளார். இந்த நிலையில், உலகளாவிய ஒப்பந்தத்துக்கு அவசியம் இல்லை.

தமிழகத்துக்கு இதுவரை 1 கோடியே 1 லட்சத்து 63 ஆயிரம்தடுப்பூசிகள் வந்துள்ளன. அதில்97 லட்சத்து 63 ஆயிரம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. சுமார்ஆயிரம் தடுப்பூசி மட்டுமே கையிருப்பில் உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x