Published : 10 Jun 2021 03:11 AM
Last Updated : 10 Jun 2021 03:11 AM

கட்டுமானப் பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் : முதல்வர் ஸ்டாலினுக்கு ஓபிஎஸ், அன்புமணி, பொறியாளர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள்

தமிழகத்தில் சிமென்ட் உள்ளிட்டகட்டுமானப் பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும்என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் ஊரடங்குக்கு முன் ரூ.440-க்கு விற்கப்பட்ட சிமென்ட் மூட்டை, தற்போது ரூ.500 முதல் ரூ.520 வரை விற்கப்படுவதாகவும், ரூ.3,500-க்கு விற்கப்பட்ட ஒரு யூனிட் ஜல்லி ரூ.5000-க்கும். ரூ.23 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட 3000 செங்கற்கள் ரூ.27 ஆயிரத்துக்கும், ரூ.58 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட ஒரு டன் கம்பி, ரூ.72 ஆயிரத்துக்கும், ரூ,3,800-க்கு விற்கப்பட்ட மணல் ரூ.5,200க்கும் விற்கப்படுவதாக செய்திகள் வருகின்றன.

இதன் காரணமாக கடன் வாங்கி சிறிய அளவில் புதிதாக வீடுகளை கட்டிக் கொண்டிருக்கும், வீடுகளை புதுப்பிக்கும், பழுதுபார்க்கும் ஏழை, எளிய கிராமப்புற மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

எனவே, முதல்வர் இதில் தனிக்கவனம் செலுத்தி, கட்டுமானப் பொருட்களின் அபரிமிதமான விலையேற்றத்துக்கான காரணத்தை கண்டறிந்து அதை போக்குவதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து விலை கட்டுக்குள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தேவைப்பட்டால் அரசு சார்பில் சலுகை விலையில் கட்டுமானப் பொருட்களை ஏழை மக்களுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அன்புமணி கோரிக்கை

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி நேற்று தனது ட்விட்டர்பதிவில், "சிமென்ட் விலை உயர்வு நியாயமற்றது. கட்டுமானத்தொழிலை நேரடியாகவும், அதன் மூலம் கட்டுமானத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை மறைமுகமாகவும் இது கடுமையாகப் பாதிக்கும். ஊரடங்கு காலத்தில் உற்பத்தி தடைபடவில்லை. தேவை குறைந்துள்ளது. அத்தகு சூழலில் விலை குறையாமல், அதிகரிப்பது விநோதம். எனவே, கட்டுமானப் பொருட்களுக்கான அதிகபட்ச விலையை தமிழக அரசு நிர்ணயிக்க வேண்டும். மூட்டை ரூ.218 என்ற விலையிலான அரசு சிமென்ட் (அம்மா சிமென்ட்) விற்பனையை அதிகரித்து, விலையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

பொறியாளர்கள் கூட்டமைப்பு

தமிழ்நாடு, புதுச்சேரி கட்டிடப் பொறியாளர்கள் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் ஆர். மோகன்ராஜ் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, ஒரு மூட்டை சிமெண்ட் ரூ.340-ல் இருந்து ரூ.520-க்கும், ஒரு டன் கம்பி ரூ.58 ஆயிரத்தில் இருந்து,ரூ.72 ஆயிரமாகவும் உயர்ந்துள்ளது. 3 ஆயிரம் செங்கல் கொண்ட ஒரு லோடு செங்கல், ரூ.23 ஆயிரத்தில் இருந்து 27 ஆயிரமாக உயர்ந்துள்ளது. ஜல்லி ஒரு யூனிட் ரூ.3,500-லிருந்து, ரூ.5,000-மாக அதிகரித்துள்ளது. மொத்தத்தில் கட்டிடப் பொருட்களின் விலை 25 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

கட்டுமானப் பொருட்களின் உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்கள் விலை உயராத நிலையில், செயற்கையாக இந்த விலை உயர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் கட்டுமானப் பணியில் இருந்த 15 லட்சம் வடமாநிலத் தொழிலாளர்கள், அவர்கள் சொந்த ஊருக்குத் திரும்பியதால், தொழிலாளர்கள் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

கட்டுமானத் துறையில் உள்ளஒப்பந்ததாரர்கள் மற்றும் பொறியாளர்கள், கட்டுனர்கள் தாங்கள் ஒப்பந்தம் செய்துள்ள பணியை முடிக்க முடியாத நிலையில் உள்ளனர்.

தனி அமைச்சரை நியமிக்க வேண்டும்

கட்டுமானப் பொருட்களின் விலைஉயர்வால் 50 லட்சம் தொழிலாளர்கள், 10 ஆயிரம் கட்டுநர்கள் 15 ஆயிரம் பொறியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய தொழிலுக்கு இணையான கட்டுமானத் தொழிலில் உள்ள நெருக்கடி நிலையை போக்க முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம். கட்டுமானத் துறைக்கு என தனியாக ஒரு அமைச்சரை நியமிப்பதோடு, கட்டுமானத் துறைக்கு ஒழுங்குமுறை ஆணையம் ஒன்றை ஏற்படுத்தி அதன் மூலம் செயற்கையாக விலையேற்றம் செய்யப்படும் கட்டுமான பொருட்களின் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x