Published : 09 Jun 2021 03:15 AM
Last Updated : 09 Jun 2021 03:15 AM

கரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்கு - லாப நோக்கில் அதிக கட்டணம் வசூலித்தால்தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை : சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை

தனியார் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகம் முழுவதும் கரோனா தொற்று 2-வது அலையின் தாக்கத்தில் இருந்து மக்களின் உயிரைக்காக்க தமிழக அரசு, மருத்துவமனைகள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் தம் உயிரைத் துச்சம் என மதித்து இரவும் பகலும் அரும்பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் சில நோயாளிகள் உயிரிழக்க நேரும்போது, மருத்துவமனைகளில் பணியாற்றிவரும் மருத்துவர்கள் மற்றும் பிற பணியாளர்களை நோயாளிகளின் உறவினர்கள் தாக்கியுள்ள சம்பவங்கள் சில இடங்களில் நடந்துள்ளன.

நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற மருத்துவமனைகளில் அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படுகிறது. ஆனாலும், சில தருணங்களில் தவிர்க்க முடியாத நிலையில் உயிரிழப்பு ஏற்படும்போது, உணர்ச்சிவசப்பட்டு மருத்துவர்களிடமும், மருத்துவமனைப் பணியாளர்களிடமும் தரக்குறைவாக நடந்துகொள்வது அவர்கள் ஆற்றிவரும் சேவையை இழிவுபடுத்துவதாக அமையும்.

இத்தகைய செயல்களை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது. இச்செயல்களில் ஈடுபடுவோர் மீது காவல் துறை மூலமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதற்கிடையே, ஒருசில மருத்துவமனைகள் இப்பேரிடர் சூழலைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டு நோயாளிகளிடம் அதிகக் கட்டணம் வசூலிப்பதாகவும், காப்பீட்டுத் திட்டப் பயனாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்காமல் அவர்களிடம் கட்டணம் கேட்பதாகவும் செய்திகள் வந்துள்ளன.

மருத்துவமனைகளையும், மருத்துவர்களையும் பாதுகாத்து அவர்களுக்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கக் கூடிய அதேநேரம், பொதுமக்களிடம் அதிக கட்டணம் வசூலித்து லாபம்அடைய நினைக்கும் மருத்துவமனைகள் மீதும், மருத்துவர்கள் மீதும் நடவடிக்கை எடுப்பதற்கும் அரசு தயங்காது.

அதன்படி, தமிழ்நாடு மருத்துவநிறுவனங்கள் (முறைப்படுத்துதல்) சட்டத்தின்படி மருத்துவமனைகளின் உரிமம் ரத்து செய்யப்படுவதோடு, சம்பந்தப்பட்டவர்கள் மீதும் சட்டபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மருத்துவமனைகளின் உரிமம் ரத்து செய்யப்படுவதோடு, சம்பந்தப்பட்டவர்கள் மீதும் சட்டபூர்வமானநடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x