

நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் அவற்றை சரிசெய்யும் வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனும் நீட்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தமிழகத்தில் நீட் தேர்வு நடைமுறை2017-ம் ஆண்டு முதல் அமலில் உள்ளது. 2018 முதல் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நீட் தேர்வுக்கு இலவசபயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
எனினும், நீட் தேர்வில் தேர்ச்சிபெற்று மருத்துவப் படிப்புகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தது. இதையடுத்து மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த அறிவிப்பால் சுமார் 400 மாணவர்கள் கடந்த ஆண்டு பயன் அடைந்தனர்.
இந்நிலையில் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தது. தற்போது வெற்றிபெற்று ஆட்சி பொறுப்பேற்றுள்ள சூழலில், நீட் தேர்வுக்கான மாற்று வழிமுறைகளை தமிழக அரசு ஆராய்ந்து வருகிறது.
அதன்படி நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் தற்போது குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு:
நீட் தேர்வு முறையால் தமிழகத்தில் உள்ள கிராமப்புற மற்றும் அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பு மறுக்கப்படும் நிலை உள்ளதாக கல்வியாளர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சமூகநீதிக்கு எதிரான இந்த நீட் தேர்வு முறை கைவிடப்பட்டு, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மருத்துவக் கல்லூரி இடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி, அதற்கான பலகட்ட போராட்டங்களை தமிழக அரசு நடத்தி வந்துள்ளது. அந்த வகையில் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி நீட் தேர்வு முறைசமுதாயத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள், அதை சரிசெய்யும் வகையில் மாணவர் சேர்க்கைக்கான மாற்று முறைகள் குறித்தும் சட்ட வழிமுறைகள் பற்றியும் முழுமையாக ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் கல்வியாளர்கள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் அடங்கிய உயர்நிலைக் குழு அமைக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் இக்குழு செயல்படும் காலம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது உட்பட பல்வேறு சிறப்புமிக்க தீர்ப்புகளை வழங்கியவர் நீதிபதி ஏ.கே. ராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.