Published : 05 Jun 2021 03:12 AM
Last Updated : 05 Jun 2021 03:12 AM
சிறைக்குள் கைதிகளுக்கு இடையே நடந்த மோதலில் கைதி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உதவி சிறை அலுவலர் நேற்று சஸ்பென்ட் செய்யப்பட்டார்.
திருநெல்வேலி மாவட்டம், மூன்றடைப்பு அருகேயுள்ள வாகைகுளத்தைச் சேர்ந்தவர் முத்துமனோ (27). ஒரு கொலை முயற்சி வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட இவர், வைகுண்டம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கிருந்து கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். அங்கு கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், முத்துமனோ கொலை செய்யப்பட்டார்.
`வைகுண்டம் சிறையில் இருந்து, பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்டதாலேயே முத்துமனோ கொலை செய்யப்பட்டுள்ளார். எனவே, சம்பந்தப்பட்ட சிறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். முத்துமனோ குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்’ என வலியுறுத்தி, அவரது உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 43 நாட்களாக முத்துமனோவின் உடலை உறவினர்கள் வாங்க மறுத்து வருகிறார்கள். அவரது உடல், உடற்கூறு ஆய்வுக்குப் பின்பு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனையில் வைக்கப்பட்டுஉள்ளது.
இதுதொடர்பாக, கைதிகள் 7 பேர் மீது பெருமாள்புரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவ்வழக்கு சிபிசிஐடி போலீஸார் விசாரணைக்கு மாற்றப்பட்டுஉள்ளது. சிறைக்குள் கொலை நடைபெற்றுள்ளதால், அப்போது பணியில் இருந்த துணை சிறை அலுவலர் சிவனு, உதவி சிறை அலுவலர்கள் சங்கரசுப்பு, கங்காராஜன், ஆனந்தராஜ், தலைமைக் காவலர் வடிவேல் முருகையா, சிறைக்காவலர் சாம் ஆல்பர்ட் ஆகிய 6 பேர், ஏப்ரல் 24-ம் தேதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். உதவி சிறை அலுவலர் சண்முகசுந்தரம் 7-வது நபராக நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT