

தஞ்சாவூர் அருகே நாஞ்சிக்கோட்டை ஊராட்சி வடக்குத் தெருவில் 24 பேருக்கும், இதே ஊராட்சிக்கு உட்பட்ட கூத்தஞ்சேரி, இனாத்துக்கான்பட்டியில் 46 பேருக்கும் கரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து அந்தப் பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டன.
இதுகுறித்து ஊராட்சி தலைவர் நாஞ்சி சத்தியராஜ் கூறும்போது, ‘‘நாஞ்சிக்கோட்டை ஊராட்சியில் 2 இறுதிச்சடங்கு நிகழ்வுகளில் பங்கேற்றவர்கள் மூலம் கரோனா பரவியதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து, அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, தேவையான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சுகாதாரத் துறையினர் நேற்று 100 பேருக்கு கரோனா பரிசோதனை செய்தனர். யாரும் வீடுகளைவிட்டு வெளியே வரக்கூடாது, முகக்கவசம் அணிய வேண்டும் என ஒலிபெருக்கியில் அறிவுறுத்தியுள்ளோம்’’ என்றார்.