

ஜெயலலிதாவின் ஆன்மா சாந்திஅடைய, சசிகலா இந்த இயக்கத்தில் இருந்து ஒதுங்கி அமைதியாக இருப்பது நல்லது என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நேற்று அவர் ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழக அரசு ஆட்சிக்கு வந்து இன்றோடு (நேற்று) 24 நாட்கள் ஆகிறது. ஆட்சியாளர்கள், அரசு இயந்திரத்தின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்கே இந்த நாட்கள் போதாது. முதல்வரும், ஆட்சியாளர்களும் செயல்படுவதற்கு எதிர்க்கட்சிகள் உறுதுணையாக இருக்கும்.
சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. சசிகலா அதிமுகவில் இல்லை. அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக வேண்டுமென்றே சிலர், சசிகலாவை முன்னிறுத்தி சில கருத்துகளை கூறிக் கொண்டிருக்கின்றனர்.
இவர்கள் ஏற்படுத்துகின்ற குழப்பத்துக்கு ஒரு அதிமுக தொண்டர் கூட செவி சாய்க்க மாட்டார்கள். நிச்சயமாக அவர்களின் எண்ணம் ஈடேறாது. சசிகலா பேசிய ஆடியோவை நானும் கேட்டேன். சசிகலாவை தொடர்பு கொண்டு எந்த தொண்டனும் பேசவில்லை. இவராகத்தான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுகிறார். அதுவும் அவர் அமமுக தொண்டரிடம்தான் பேசினார். அவரும் என்ன சொல்கிறார் என்றால் நீங்கள் வெளியில் வரும்போது நானும் பேரணியில் கலந்து கொண்டேன் என்கிறார்.
இக்கட்சியால், ஜெயலலிதாவால், சாதாரண நிலையில் இருந்த அக்குடும்பம் இன்று தமிழகத்திலே விரல் விட்டு எண்ணக்கூடிய கோடீஸ்வர குடும்பங்களில் ஒன்றாக இருக்கிறது.
ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தியடைய, அவர்கள் இந்த இயக்கத்தில் இருந்து ஒதுங்கி அமைதியாக இருப்பது நல்லது என கருதுகிறேன். இல்லையென்று சொன்னால் அந்த பழி, பாவம் முழுவதும் சசிகலாவையே சாரும்.
எந்தச் சூழ்நிலையிலும் சசிகலா அதிமுகவில் நுழைய முடியாது. அதற்கான வாய்ப்பும் இல்லை. ஒவ்வொரு அதிமுக தொண்டனும் தெளிவாக, இந்த இயக்கத்தை வழிநடத்த தயாராக இருக்கிறார்கள்.
கருத்துவேறுபாடுகள்
இனி அவர்களுக்கு அந்தவாய்ப்பே இருக்காது. உறுதியாக அவர்கள் உள்ளே நுழையமுடியாது. இந்த முடிவு அதிமுகவின் ஒவ்வொரு தொண்டனும் உணர்வோடு சொல்லக்கூடிய முடிவு.
அதிமுக ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் இடையே எந்த கருத்து வேறுபாடுகளும் இல்லை. இதுபோன்ற கருத்துகளை உருவாக்கி, இதிலேகுளிர் காயலாம் என சில சந்தர்ப்பவாதிகள் முயற்சி செய்கிறார்கள். அதற்கு சசிகலா இரையாகிவிடக்கூடாது என நான் எச்சரிக்கிறேன்.
இவ்வாறு கே.பி.முனுசாமி தெரிவித்தார்.