ஆசிரியர்களுக்கு கரோனா களப்பணி கட்டாயமில்லை : அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தகவல்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற  கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பேசுகிறார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. உடன், அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன், ஆட்சியர் ம.கோவிந்தராவ் மற்றும் எம்பி, எம்எல்ஏக்கள்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பேசுகிறார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. உடன், அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன், ஆட்சியர் ம.கோவிந்தராவ் மற்றும் எம்பி, எம்எல்ஏக்கள்.
Updated on
1 min read

கரோனா தடுப்பு களப் பணியில் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபடுவது கட்டாயமில்லை. விருப்பம் உள்ளவர்கள் தன்னார்வலராக பணியாற்றலாம் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:

கரோனா தடுப்பு களப்பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்தும் முடிவை கைவிட வேண்டும் என்று ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. எனவே, விருப்பம் உள்ள ஆசிரியர்களை தன்னார்வலர்களாக கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதில், யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது.

சென்னையில் மாணவிகளுக்கு பாலியல்ரீதியாக தொந்தரவு அளித்த தனியார் பள்ளி ஆசிரியர் குறித்து, மாவட்டக் கல்வி அலுவலர் மூலம் துறைரீதியான விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு, கல்விதுறை சார்பில் குழு அமைத்து, ஓரிரு நாட்களில் விளக்கம் அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தொடர்புடைய பள்ளி நிர்வாகம், அந்த ஆசிரியரை சஸ்பென்ட் செய்துள்ளது. தொடர்ந்து, அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பிரச்சினைக்கு உரிய அந்த சிபிஎஸ்இ பள்ளியை மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றார்.

பின்னர், தஞ்சாவூர் மேம்பாலம் அரசு காது கேளாதோர் பள்ளியில் கரோனா தடுப்பூசி முகாமையும், அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் புதிதாக தொடங்கப்பட்ட கரோனா சிகிச்சை மையத்தையும் அமைச்சர் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in