

தமிழகத்தில் கரோனா ஊரடங்குநீட்டிக்கப்படுமா? அதிக கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுமா? என்பதுகுறித்து சென்னையில் இன்று (மே 22) நடைபெறும் மருத்துவ வல்லுநர்கள் குழு மற்றும் அனைத்துக் கட்சி எம்எல்ஏ குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: தமிழகத்தில் புதிய அரசு அமைந்த 2 வாரங்களில், 16,938 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் 7,800 படுக்கைகள் ஆக்சிஜன் வசதி கொண்டவை. 30 இயற்கைமருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 375 டன் ஆக்சிஜனும், வெளி மாநிலங்களில் இருந்து100 டன் ஆக்சிஜனும் நாள்தோறும் பெறப்படுகிறது. முன்பைவிட தற்போது நாளொன்றுக்கு 239 டன் ஆக்சிஜன் கூடுதலாக பெறப்பட்டு வருகிறது. மேலும், பல்வேறு நிறுவனங்களில் ஆக்சிஜன் உற்பத்திதொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் நாள்தோறும் 1.70 லட்சம் பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. புதிதாக 2,000 மருத்துவர்களும், 6,000 செவிலியர்களும் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
புதிதாக அமைந்துள்ள திமுகஅரசு கரோனா தடுப்புப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், அரசு அதிகாரிகள் அனைவரும் போர்க்கால அடிப்படையில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நேரத்தில் தனது உயிரைக் கொடுத்து பணியாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப் பணியாளர்கள், அரசு அதிகாரிகள், காவல் துறையினர் அனைவருக்கும் அரசின் சார்பில் இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில் ‘கருப்பு பூஞ்சை’நோயால் பாதிக்கப்பட்டதாக இதுவரை 9 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சரியான மருந்துஉள்ளது. சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஊரடங்கு தொடருமா?
இதில், கரோனாஊரடங்கு நீட்டிக்கப்படுமா? அதிக கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுமா போன்றவை குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படும்.
விரைவில் 2-வது தவணை
முன்னதாக, திருச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பகல் 1.30 மணியளவில் மதுரையில் இருந்து கார் மூலம் திருச்சி வந்தார். பின்னர், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு தினத்தையொட்டி, ஜங்ஷன் ரயில் நிலையம் அருகில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மருத்துவமனையில் ஆய்வு
ஆய்வுகளின்போது, தமிழக நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திருச்சி சிவா எம்பி, மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, சட்டப்பேரவை உறுப்பினர்கள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் வனிதா, என்ஐடி இயக்குநர் மினி ஷாஜிதாமஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.