

மக்கள் நீதி மய்யம் கட்சியின் கட்டமைப்பு மற்றும் சார்பு அணிகளின் பொதுச் செயலாளரும், சட்டப்பேரவைத் தேர்தலில் திருவெறும்பூர் தொகுதியில் அக்கட்சியின் சார்பில் போட்டியிட்டவருமான எம்.முருகானந்தம், நேற்று அக்கட்சியில் இருந்து விலகினார்.
இதுதொடர்பாக திருச்சியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மக்கள் நீதி மய்யம் கட்சியில் ஜனநாயகம் அற்றுப்போய்விட்டது. சர்வாதிகாரம் தலைதூக்கிவிட்டது. சட்டப்பேரவைத் தேர்தலில் யாருடனும் ஆலோசிக்காமல், தன்னிச்சையாக பலவீனமான கட்சிகளுடன் கூட்டணி வைத்ததும், 100-க்கும் அதிகமான தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியதுமே தேர்தல் தோல்விக்கு முழுக் காரணம்.
கட்சியின் வாக்கு வங்கி 3.4 சதவீதமாக இருந்த நிலையில், செப்டம்பர் முதல் ஜனவரி வரையிலான காலத்தில் 6 முதல் 8 சதவீதம் வரை அதிகரித்திருந்தது. ஆனால், தேர்தலில் அது 2.4 சதவீதமாக குறைந்துவிட்டது. தேர்தல் தோல்விக்கு கமல்ஹாசன்தான் பொறுப்பேற்க வேண்டும்.
ஆனால், இதற்கான பொறுப்பை தான் ஏற்காமல், நிர்வாகிகளை மட்டும் ராஜினாமா செய்யுமாறு கூறுவது தலைவருக்கான பொறுப்பாக இல்லை. கொள்கை வேறு,தேர்தல் கூட்டணி வேறு என்ற தெளிவு இருந்திருந்தால் கட்சியை வளர்த்திருக்க முடியும். ஆனால், மக்கள் நீதி மய்யம் கட்சி வளர்வதற்கான வாய்ப்பு இல்லை. நான்பணியாற்ற இதுவரை வாய்ப்பளித்த கமல்ஹாசனுக்கு நன்றிஎன்றார். முன்னதாக, கமல்ஹாசனுக்கு தான் எழுதிய 6 பக்க கடிதத்தை செய்தியாளர்களிடம் முருகானந்தம் வாசித்துக் காட்டினார்.