பூண்டி துளசிஅய்யா வாண்டையார் காலமானார் :

துளசி அய்யா வாண்டையார்
துளசி அய்யா வாண்டையார்
Updated on
2 min read

தஞ்சாவூர் மாவட்டம் பூண்டிகே.துளசி அய்யா வாண்டையார்(92) உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் நேற்று காலமானார்.

பாரம்பரியமிக்க பூண்டி வாண்டையார் குடும்பத்தைச் சேர்ந்தவர் கே.துளசி அய்யா வாண்டையார். இவரது முன்னோர்கள் பூண்டியில் தொடங்கிய பூண்டி புஷ்பம் கல்லூரிக்கு நீண்டகாலமாகச் செயலராகவும், தாளாளராகவும் இருந்து வந்தார். மாணவர்கள் உட்பட எவரிடமும் நன்கொடை பெறாமல் கல்லூரியை நடத்த முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர்.

மூதறிஞர் ராஜாஜி, பெருந்தலைவர் காமராஜர், முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி ஆகியோருடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்த இவர், ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தின் காங்கிரஸ் கட்சித் தலைவராகவும் இருந்தார். அம்மாபேட்டை ஒன்றியக் குழுத் தலைவராகவும், தஞ்சாவூர் தொகுதி எம்.பி.யாகவும் இருந்துள்ளார். இவர் எம்.பி.யாக இருந்த காலத்தில் தொகுதி மேம்பாட்டு நிதி முழுவதும் பள்ளிகளில் கட்டிடங்கள் கட்டவே பயன்படுத்தினார்.

பூண்டி கல்லூரியில் தியான மண்டபத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக மாணவர்களுக்கு கீதை வகுப்புகள் நடத்தினார். ஒரு லட்சத்துக்கும் அதிகமான கீதை உபதேசம் குறித்த ஒலி நாடா மற்றும் குறுந்தகடுகள் விநியோகம் செய்துஉள்ளார். கடைசிவரை கதராடை, குல்லா அணிந்து வந்தார். காந்தி சுட்டுக் கொல்லப்பட்டது வெள்ளிக்கிழமை என்பதால், வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் மவுன விரதம் கடைபிடித்து வந்தார்.

வாழ்வியல் நெறிகள் குறித்துஇன்ப வாழ்வு என்ற நூலை எழுதியுள்ளார். மேலும், மனோரஞ்சிதம், குரல் கொடுக்கும் வானம்பாடி, பயணங்கள் தொடரும், செல்வச்சீமை ஐரோப்பா, ராக பாவம், வழிபாடு, ஆங்கிலத்தில் ‘ஏ மெலோடியஸ் ஹார்மனி’ உள்ளிட்ட நூல்களையும் எழுதியுள்ளார். தமிழ், ஆங்கிலத்தில் புலமை பெற்ற இவர், இந்தி, சம்ஸ்கிருதமும் கற்றவர்.

இவருக்கு பத்மாவதி அம்மாள்என்ற மனைவியும், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித்தலைவரான கிருஷ்ணசாமி வாண்டையார் என்ற மகனும், புவனேஸ்வரி என்ற மகளும் உள்ளனர். இவரது உடல் பூண்டியில் உள்ளவீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, நேற்றிரவு தகனம் செய்யப்பட்டது.

துளசி அய்யா வாண்டையார் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: டெல்டா மாவட்ட மக்களால் “கல்விக் கண் திறந்த வள்ளல்” எனக் கொண்டாடப்படும் சுதந்திரப் போராட்ட வீரரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பியுமான துளசி அய்யா வாண்டையார் மறைவெய்திய செய்தியறிந்து ஆற்றொணாத் துயரம் கொண்டேன். இறுதிவரை காந்தியடிகளின் ஆத்மார்த்த சீடராக விளங்கி வந்த அய்யா வாண்டையார் மறைவு டெல்டா மாவட்டத்துக்கு மட்டுமல்லாமல் தமிழகத்துக்கே பேரிழப்பாகும்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி: சிறந்தபண்பாளரும், இலக்கியவாதியும், ஆன்மிக நாட்டம் கொண்டவருமான துளசி அய்யா வாண்டையாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு அதிமுக சார்பில் எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: அனைத்து தரப்பு மக்களின் நன்மதிப்பை பெற்ற மிகச்சிறந்த அறிஞர், ஆன்மிகவாதி, பழகுவதில் இனிய பண்பாளர். காங்கிரஸ் பேரியக்க வளர்ச்சியில் பெரும் துணையாக இருந்த அவரது மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: தமிழகத்தில் மூத்த தலைவர், சிறந்த கல்வியாளர். அவரது மறைவு வேதனையளிக்கிறது.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன்: முதுபெரும் காங்கிரஸ் தலைவரும், தீவிர காந்திய பற்றாளரும், டெல்டா மாவட்டங்களில் ஆயிரமாயிரம் ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் வாழ்வில் கல்வி ஒளியேற்றிவைத்த கல்வி வள்ள அவர்.

இதேபோன்று, வைகோ, ராமதாஸ், சு.திருநாவுக்கரசர், கி.வீரமணி, கமல்ஹாசன், தமிழருவி மணியன், பழ.நெடுமாறன், எம்.எச்.ஜவாஹிருல்லா உள்ளிட்ட தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in