Published : 18 May 2021 03:11 AM
Last Updated : 18 May 2021 03:11 AM

உதகை மலர்க் காட்சியை இணையவழியில் நடத்த பரிசீலனை : தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் தகவல்

புதுப்பொலிவுடன் பசுமையாக காட்சியளிக்கும் உதகை தாவரவியல் பூங்கா. (அடுத்த படம்) உதகை தாவரவியல் பூங்கா காட்சி மாடத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள மலர்த் தொட்டிகள். படங்கள்: ஆர்.டி.சிவசங்கர்

உதகை

நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் மே மாதத்தில் மலர்க் காட்சி, அரசு ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக் கண்காட்சி, கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி மற்றும் தனியார் அமைப்பின் சார்பில் பழமை வாய்ந்த கார்களின் அணிவகுப்பு, சுற்றுலாத் துறையின் சார்பில் உதகை படகு இல்லத்தில் படகுப் போட்டி மற்றும் படகு அலங்காரப் போட்டி என பல்வேறு கோடை விழா நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். இதில், தோட்டக் கலைத் துறையின் சார்பில் 5 நாட்கள் நடைபெறும் மலர்க் காட்சியில் பார்வைக்கு வைக்கப்படும் மலர்கள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவரும்.

கடந்த ஆண்டு கரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதால், மலர்க் காட்சியும் ரத்து செய்யப்பட்டது. நடப்பாண்டில் உதகையில் மலர்க் காட்சி சிறப்பாக நடத்த முடிவு செய்யப்பட்டு, தோட்டக்கலைத் துறை சார்பில் புதிய ரக மலர் செடிகள் நடவு செய்து, சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பூந்தொட்டிகளும் தயார் செய்யப்பட்டன. தற்போது கரோனா வேகமாகப் பரவி வருவதால், சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் உள் நாடு மற்றும் வெளிநாட்டு மக்கள், உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மலர்ந்துள்ள லட்சக்கணக்கான மலர்களை காண இணையதளம் வழியாக மலர்க் காட்சி நடத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத் துறை ஆகியவை ஆலோசித்து வருகின்றன.

தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் சிவசுப்ரமணியம் சாம்ராஜ் கூறும்போது, ‘‘மலர்க் காட்சிக்காக உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 5 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு, சிறப்பாக தயார்படுத்தப்பட்டன. பூங்காவில் உள்ள காட்சி அரங்குகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலர்த் தொட்டிகளில் லில்லியம்ஸ், சால்வேனியா, ரோஸ் மேரி, மேரி கோல்ட், ஸ்டார் கோல்ட், ஸ்டார் சால்வேனியா, பிளாக்ஸ், லிமோனியா, டெல்பீனியம் உள்ளிட்ட மலர் ரகங்களை அரங்குகளில் அடுக்கும் பணி நடந்து வருகிறது.

கரோனாவால் பூங்கா மூடப்பட்டுள்ளதால், மலர்க் காட்சியை இணையதளம் வாயிலாக ‘விர்ச்சுவல் பிளவர் ஷோ’வாக நடத்த ஆலோசித்துவருகிறோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x