

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருநெல்வேலி மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்தவர் நீஷ் (42). கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் குற்றவியல் நீதித்துறை நடுவராக பணியாற்றி வந்த இவர், கடந்த மாதம் திருநெல்வேலி மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவராக நியமிக்கப்பட்டார். திருநெல்வேலியில் கடந்த மாதம் 26-ம் தேதி பொறுப்பேற்றார்.
உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து ஏப்ரல் 28-ம் தேதி முதல் விடுமுறையில் இருந்த அவர், தூத்துக்குடியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார். இங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
தூத்துக்குடியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 2 நாட்கள் சிகிச்சை பெற்றார்.
உடல்நிலை மோசமானதை தொடர்ந்து இம்மாதம் 1-ம் தேதி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு 11.45 மணியளவில் உயிரிழந்தார். அவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.