

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் இன்னும் ஓரிரு நாட்களில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கவுள்ள நிலையில், ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழுவினரை கனிமொழி எம்பி தனித்தனியாக சந்தித்துப் பேசினார்.
தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் உடன் இருந்தனர்.
இந்நிலையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் பேராசிரியை பாத்திமா பாபு,வழக்கறிஞர் அதிசயகுமார், தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோர் கனிமொழியிடம் அளித்த மனு விவரம்:
ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடியில் இருந்து நிரந்தரமாக அகற்ற சட்டப்பேரவையில் சிறப்பு தீர்மானம் இயற்ற வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் செய்த தவறை கருத்தில் கொண்டு,அவர்கள் மீது அரசு குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மீதுபதிவு செய்யப்பட்ட வழக்குகளைரத்து செய்ய வேண்டும்.
சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டுகளைத் திரும்பப் பெற வேண்டும். தேசிய மனித உரிமை ஆணையம் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும். ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையத்தின் விசாரணையை துரிதப்படுத்த வேண்டும். துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும்.
துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயம் அடைந்தோருக்கு அரசு வேலை வழங்கப்பட்ட நிலையில், கல்வித் தகுதியின் அடிப்படையில் அவர்களுக்கு உரிய வேலை வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.