

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற ஆம்புலன்ஸில் காத்திருந்த கரோனா தொற்றாளர்கள் 3 பேர் நேற்று உயிரிழந்தனர்.
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்றாளர்களுக்கு 281 படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 150 படுக்கைகள் ஆக்சிஜன் வசதி கொண்டவை. கரோனா தொற்றாளர்களின் உடல்நிலையை கருத்தில்கொண்டு, உடனடி சிகிச்சை தேவைப்படுவோர் மட்டும் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். ஓரளவு நல்லநிலையில் உள்ள நோயாளிகளை, திருப்பூர் - கல்லூரி சாலையிலுள்ள தனியார் மண்டபம், திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி, ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அவிநாசி தனியார் கல்லூரி ஆகிய மையங்களிலுள்ள தனிமைப்படுத்துதல் பகுதிக்கு அனுப்புகின்றனர்.
இந்நிலையில், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நேற்று காலை ஒரே நேரத்தில் தொற்றாளர்கள் பலர் சிகிச்சைக்கு காத்திருந்தனர். அப்போது ஆம்புலன்ஸிலும் ஆக்சிஜன் வசதியுடன் சிலர் காத்திருந்தனர். இந்நிலையில், ஆம்புலன்ஸில் காத்திருந்த 55 வயது ஆண், 40 வயது பெண், மற்றொரு நடுத்தர வயது ஆண் என 3 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக மருத்துவமனை டீன் வள்ளி கூறும்போது, "திருப்பூர் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றாளர்கள் அறை நிரம்பிவிட்டது. நோயாளிகளின் நிலையைப் பொறுத்து, இங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கிறோம். யாரும் தொடர்புகொண்டு கேட்காமல் வருவதால், ஆம்புலன்ஸில் காத்திருக்கும் நிலை உள்ளது. இன்று ஆம்புலன்ஸில் காத்திருந்த 3 பேர்உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களுக்கு பல்வேறு உடல் பிரச்சினைகள் இருந்துள்ளன" என்றார்.
மருத்துவமனை முன்களப் பணியாளர்கள் சிலர் கூறும்போது, "தனியார் மருத்துவமனைகளில் கரோனா தொற்றாளர்களுக்கு கடைசி வரை சிகிச்சை அளிப்பதில்லை. மாறாக, கடைசி தருணத்தில் இங்கே அனுப்பி விடுகின்றனர். இதனால் இங்கு காத்திருக்கும் சூழலும், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன" என்றனர்.