Published : 09 May 2021 03:15 AM
Last Updated : 09 May 2021 03:15 AM
தமிழகத்தில் கரோனா சிகிச்சைக்கு 12,500 ஆக்சிஜன் படுக்கைகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளன என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, சுகாதாரத் துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, மருத்துவமனை டீன் பாலாஜி உடன் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: இந்த மருத்துவமனையில் 1,500-க்கும் மேற்பட்ட, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன. கூடுதலாக 500 ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்பதற்கு முன்பாகவே தொற்று பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளார். தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் வரும் 15-ம்தேதிக்குள் 12,500 ஆக்சிஜன் படுக்கைகள் பயன்பாட்டுக்கு வரவுள்ளன. அடுத்தகட்டமாக 12,500ஆக்சிஜன் படுக்கைகளை அமைக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதுவும் விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படுகிறது. தமிழகம் முழுவதும் இருந்து பொதுமக்கள் வந்து மருந்து வாங்கிச் செல்கின்றனர். பொதுமக்களின் சிரமத்தை அறிந்த முதல்வர், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மருந்து விற்பனையை தொடங்க அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து மதுரை, திருச்சி, கோவை, சேலம்,திருநெல்வேலி ஆகிய இடங்களில் மருந்து விற்பனை தொடங்கஉள்ளது.
முழு ஊரடங்கு காலத்தில் தடுப்பூசி முகாம் செயல்படும். கரோனா தொற்று பரவலை தடுக்க வீடுவீடாகச் சென்று ஆய்வு செய்யும்பணி நடைபெறும். சித்த வைத்தியம் மற்றும் ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவ சிகிச்சைகளை கரோனா நோயாளிகளுக்கு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு வராமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முழு ஊரடங்கு காலத்தில் தடுப்பூசி முகாம் செயல்படும். கரோனா தொற்று பரவலை தடுக்க வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்யும்பணி நடைபெறும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT