

ரங்கம் ரங்கநாதர் கோயிலில் உற்சவரான நம்பெருமாளுக்கு வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து நேற்று வஸ்திர மரியாதை வழங்கப்பட்டது.
ரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை தேர் திருவிழா நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் இவ்விழாவின் 9-ம் திருநாளன்று உற்சவரான நம்பெருமாளுக்கு வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து வஸ்திர மரியாதை அளிக்கப்படும்.
அந்த வகையில், வில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து ஆண்டாள் கிளி மாலை, பட்டு வஸ்திரங்கள் மற்றும் மங்கலப் பொருட்கள் ஆகியவற்றை ஆண்டாள் கோயில் செயல் அலுவலர் இளங்கோவன், தக்கார் ரவிச்சந்திரன், ரமேஷ் பட்டர் ஆகியோர் ரங்கம் கோயிலுக்கு நேற்று எடுத்து வந்து கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்துவிடம் வழங்கினர்.
இந்த வஸ்திரங்கள் மற்றும் கிளி மாலை ஆகியவை ரங்கம் கோயிலில் நடந்து வரும் சித்திரை தேர் திருவிழாவின் 9-ம் திருநாளான இன்று (மே 9) சித்திரை தேரோட்டத்துக்கு பதிலாக கருட வாகனத்தில் எழுந்தருளும் நம்பெருமாளுக்கு அணிவிக்கப்படும்.