தமிழகத்திலேயே முதன்முறையாக ஜெயங்கொண்டத்தில் - டிரோன் மூலம் மருந்து தெளித்து சீமை கருவேல மரங்கள் அழிப்பு :

தமிழகத்திலேயே முதன்முறையாக ஜெயங்கொண்டத்தில் -  டிரோன் மூலம் மருந்து தெளித்து சீமை கருவேல மரங்கள் அழிப்பு :
Updated on
1 min read

தமிழகத்திலேயே முதன்முறையாக ஜெயங்கொண்டம் பகுதியில் டிரோன் மூலம் மருந்து தெளித்து சீமை கருவேல மரங்களை அழிக்கும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகரப் பகுதியில் உள்ள சீமை கருவேல மரங்களை அழிக்க, ஆள் இல்லா விமானம் (டிரோன்) மூலம் மருந்து தெளிக்கும் பணிக்கான தொடக்க நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்குநர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை வழிகாட்டுதலின்படி நடந்த இந்நிகழ்ச்சிக்கு, சோழன் சிட்டி லயன்ஸ் கிளப் மாவட்டத் தலைவர் முத்துக்குமரன் தலைமை வகித்தார்.

இப்பணியை உடையார்பாளை யம் கோட்டாட்சியர் அமர்நாத் தொடங்கி வைத்தார். சென்னை அண்ணா பல்கலைக்கழக வான்வெளி ஆராய்ச்சி மைய ஆராய்ச்சியாளர் வருண்குமார் தலைமையிலான குழுவினர் டிரோனை இயக்கி, ஜெயங்கொண்டத்தை சுற்றியுள்ள இடங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை அழிப்பதற்காக மருந்து தெளிக்கும் பணியை மேற்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியை இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்குநர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை காணொலிக் காட்சி மூலம் பார்வையிட்டார். பின்னர் அவர் காணொலி வாயிலாக செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘விவசாயத்துக்கும், மக்களுக்கும் ஊறு விளைவிக்கும் சீமை கருவேல மரங்கள், பார்த்தீனிய செடிகள் உள்ளிட்ட தேவையற்ற மரம், செடிகளை டிரோன் மூலம் மருந்து தெளித்து அழிக்கும் பணியில் அண்ணா பல்கலைக்கழக மற்றும் ஐ.ஐ.டி மாணவர்கள், தனியார் தொண்டு நிறுவனத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

சோதனை முறையில் தமிழ கத்திலேயே முதல்முறையாக அரிய லூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் நடைபெறும் இப்பணி வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட பின்பு, அரசு சார்பில் தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்த வலியுறுத்தப்படும்’’ என்றார்.

டிரோன் மூலம் மருந்து தெளிக் கப்பட்ட பிறகு 15 நாட்களுக்குள் சீமை கருவேல மரங்கள் காய்ந்து விடும் என இப்பணியில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சிஅலுவலர்கள் சந்தானம், குருநாதன், துணை வட்டார வளர்ச்சிஅலுவலர்கள் லதா, செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in