Published : 06 May 2021 03:12 AM
Last Updated : 06 May 2021 03:12 AM

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் - ஆக்சிஜன் உற்பத்தி எப்போது தொடங்கப்படும்? : மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி எப்போது தொடங்கப்படும் என்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே, ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்துக்கு நேற்று மின் இணைப்பு கொடுக்கப்பட்டது. 7 நாட்களில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கரோனா தொற்றை தடுப்பது மற்றும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பான வழக்கு விசாரணை நேற்று தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது நீதிபதிகள், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி எப்போது தொடங்கும் என கேள்வி எழுப்பினர். மேலும் ஜெர்மனி, ருமேனியா போன்ற நாடுகளில் இருந்து கிடைக்கப்பெற்றுள்ள உதவிகளை அனைத்து மாநிலங்களுக்கும் பகிர்ந்தளிப்பது தொடர்பான நடைமுறை குறித்தும் கேள்வி எழுப்பினர்.

அதற்கு மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆர்.சங்கரநாராயணன், இதுதொடர்பாக மத்திய அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்கப்படும் என்றார்.

அதையடுத்து நீதிபதிகள், புதிய அரசு அமைந்துள்ளதால் புதிதாக அரசு வழக்கறிஞர்களை நியமிக்க குறிப்பிட்ட கால அவகாசம் தேவைப்படும் என்றனர். மேலும் தமிழகத்தில் பதவியேற்பு விழா மிக எளிமையாக நடத்தப்படும் என்ற திமுக தலைமையின் அறிவிப்புக்கு பாராட்டு தெரிவித்தனர். அத்துடன் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்களை சிறிதுகாலத்துக்கு தள்ளி வைக்க வேண்டும் என திமுக தரப்புக்கு தலைமை நீதிபதி வேண்டுகோள் விடுத்தார்.

பட்டாசுகள் வெடிக்கக்கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையிலும் திமுகவினர் சில இடங்களில் பட்டாசு வெடித்து வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டது குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகளை தலைமை நீதிபதி சுட்டிக்காட்டினார்.

அப்போது திமுக மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, உடனடியாக போலீஸார் வரவழைக்கப்பட்டு இந்த கொண்டாட்டங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. இதுதொடர்பாக கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் அவர், தற்போது தமிழகத்திலும் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவும் சூழல் உள்ளது. எனவே தமிழகத்துக்கு தினமும் 500 மெட்ரிக் டன் ஆக்சிஜனை ஒதுக்கீடு செய்ய 5 தென் மாநிலங்களும் ஒப்புக்கொண்டு, அதற்கான ஒப்புதலை தலைமைச் செயலர்கள் அடங்கிய குழுவுக்கும் கடந்த மே 2-ம் தேதியே அனுப்பி வைத்துள்ளது. ஆனால் இப்போது வரை தமிழகத்துக்கான ஆக்சிஜன் ஒதுக்கீடு அளவுக்கான ஒப்புதல் குறித்து மத்திய அரசு எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை. எனவே தமிழகத்துக்கு தினமும் 500 மெட்ரிக் டன் என்ற அளவில் ஆக்சிஜன் ஒதுக்கீடு செய்வது குறித்து மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

அதையடுத்து நீதிபதிகள், இதுதொடர்பாகவும் மத்திய அரசு தரப்பில் பதிலளிக்க வேண்டும், என உத்தரவிட்டு விசாரணையை இன்றைக்கு (மே 6) தள்ளி வைத்துள்ளனர்.

மேலும் கரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கை அமல்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கு, தமிழகம் முழுவதும் சித்தா மற்றும் ஹோமியோபதி சிறப்பு மருத்துவமனைகளை அமைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு போன்றவற்றையும் இந்த வழக்குடன் சேர்த்து பட்டியலிட நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

ஆலைக்கு மின் இணைப்பு

இதற்கிடையே, ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை கண்காணிக்க, உச்ச நீதிமன்றம் உத்தரவின்பேரில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு குழு கூட்டம், தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. குழுவின் தலைவர் ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தலைமை வகித்தார்.

தொடர்ந்து, இக்குழுவினர் ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதுகுறித்து, ஆட்சியர் கூறும்போது, “ஆக்சிஜன் உற்பத்திக்கு தேவையான அளவில் மட்டும் மின்சாரம் மற்றும் குடிநீர் வழங்கப்படும். முதல்கட்டமாக அனைத்து இயந்திரங்களையும் இயக்கி பரிசோதனை செய்யப்படும். தொடர்ந்து பாதுகாப்பு ஆய்வு நடத்தப்பட்டு, ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கும். இன்னும் 7 நாட்களில் மருத்துவ பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கும் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.

கண்காணிப்பு குழுவினர் நேற்று மாலையில் மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் ஆய்வு செய்தனர். அப்போது, தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில், ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்துக்கு மட்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து, ஆக்சிஜன் உற்பத்திக்கான அடுத்தகட்ட பணிகளை ஸ்டெர்லைட் நிறுவனம் தொடங்கியது.

ஸ்டெர்லைட் அறிக்கை

ஸ்டெர்லைட் நிறுவனம் நேற்று மாலையில் வெளியிட்ட அறிக்கையில், `ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்துக்கு மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டதை வரவேற்கிறோம். உடனடியாக ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்குவதை நோக்கி பணிகளை மேற்கொண்டு வருகிறோம்’எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x