

நூல் விலை உயர்வைத் தடுக்க ஏற்று மதியைக் கட்டுப்படுத்தவேண்டும் என கரூர் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூரில் கையுறை, ஏப்ரான், கிச்சன் டவல், கர்ட்டன் (திரைச்சீலைகள்), தலையணை உறைகள்உள்ளிட்ட வீட்டு உபயோக ஜவுளிகள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி அதிகளவில் நடைபெறுகிறது. இங்கு மட்டும் 300 முதல் 400 நேரடி வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர்கள் உலகின் பல்வேறு நாடுகளுக்கு வீட்டு உபயோக ஜவுளிகளை ஏற்றுமதி செய்து வருகின்றனர். உள்நாடு மற்றும் வெளிநாடு ஏற்றுமதி மூலம் ஆண்டுக்கு ரூ.3,000 கோடி வருவாய் ஈட்டி வருகிறது.
கடந்தாண்டு கரோனா தொற்று ஊரடங்கால் மார்ச் மாதத்துடன் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் உற்பத்தி செய்த ஜவுளிகளை அனுப்ப முடியாமல் சரக்குகள் தேங்கின. இதனால் ஜவுளி ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்பட்டனர். அதன்பின் அரசின் தளர்வுகளால் இரு மாதங்களுக்கு பின் ஜவுளி உற்பத்தி மீண்டும் தொடங்கியது.
25 சதவீதம் விலை உயர்வு
நூல் ஏற்றுமதி மற்றும் தேவை ஆகியவற்றின் காரணமாக நூல் விலையேற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே நூல் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த, நூல் ஏற்றுமதியைக் குறைத்து, உள்ளூர் தேவையை பூர்த்தி செய்ய முன்னுரிமை வழங்க வேண்டும் என கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து கரூர் ஜவுளி ஏற்றுமதியாளர் சங்க தலைவர் நாச்சிமுத்து கூறியது:
கடந்த நவம்பரில் இருந்தே நூல் விலை மெல்ல உயரத்தொடங்கி தற்போது 25 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. வெளிநாடுகளுக்கு நூல் ஏற்றுமதி செய்யப்படுவதாலும், ஓரளவு ஆர்டர்கள் கிடைத்து உற்பத்தி தேவை அதிகரித்து இருப்பதாலும் நூல் விலை அதிகரித்து வருகிறது. எனவே நூல் ஏற்றுமதியை 50 சதவீதம் குறைக்கவேண்டும்.
மேலும், நூல் உற்பத்தியாளர்கள் வெளிநாடுகளிலிருந்து பஞ்சு இறக்குமதி செய்ய வரி விலக்கு அளிக்க வேண்டும் என்றார்.