Published : 25 Apr 2021 06:09 AM
Last Updated : 25 Apr 2021 06:09 AM

காளையார்கோவில் அருகே விதிமீறிய சிறுவர்களால் - கார் கவிழ்ந்து மின் கம்பத்தில் மோதி விபத்து : சிவகங்கை ஆட்சியர் உட்பட 4 பேர் காயம்

சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் அருகே சாலையின் குறுக்கே பைக்கை ஓட்டி வந்த சிறுவர்கள் மீது மோதாமல் இருக்க முயன்றபோது, ஆட்சியரின் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆட்சியர் உட்பட 4 பேர் காயமடைந்தனர்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி நேற்று காலை காரைக்குடி அரசு மருத்துவ மனையை ஆய்வு செய்வதற்காக, காரில் காளையார் கோவிலில் இருந்து சென்று கொண்டிருந்தார்.

காரை ஓட்டுநர் செபஸ்டியான் ஓட்டினார். காளகண்மாய் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளில் 2 சிறுவர்கள் திடீரென குறுக்கே வந்தனர். அப்போது அவர்கள் மீது மோதாமல் இருக்க காரை ஓட்டுநர் திருப்பினார்.

இதில் எதிர்பாராத விதமாக கார் கவிழ்ந்து 3 முறை உருண்டு அருகே இருந்த உயர்அழுத்த மின் கம்பத்தில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி, அவரது நேர்முக எழுத்தர் மணிகண்டன் (38), தபேதார் ராஜ சேகரன் (58), ஓட்டுநர் செபஸ்டியான் (43) ஆகிய 4 பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. ஆனால், அவர்கள் வெளியே வரமுடியாமல் காரிலேயே சிக்கினர்.

காரில் இருந்த ஆட்சியரின் பாதுகாவலர் முகமது மீரா பாஜித், கண்ணாடியை உடைத்து அவர்களை வெளியேற்றினார். அதைத் தொடர்ந்து காயமடைந்த 4 பேரையும் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதித்த னர். இதில் மேல் சிகிச்சைக்காக மணிகண்டன் மதுரை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

மேலும் உயர் மின்னழுத்த மின் கம்பம் சேதமடைந்ததால் அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து காளையார்கோவில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x