திண்டிவனம் பகுதியில் - துப்பாக்கி முனையில் வீடு புகுந்து கொள்ளை : அடுத்தடுத்த இடங்களில் மர்ம நபர்கள் கைவரிசை

கொள்ளையர்கள் விட்டுச் சென்ற கார்.
கொள்ளையர்கள் விட்டுச் சென்ற கார்.
Updated on
1 min read

திண்டிவனம் அருகே துப்பாக்கி முனையில் அடுத்தடுத்த இடங்களில் கொள்ளையர்கள் நகை, பணத்தை கொள்ளைடியத்துச் சென்றனர்.

திண்டிவனம் மரக்காணம் சாலையில் உள்ள காமராஜ் நகரில் வசிப்பவர் பிலவேந்திரன் (53). இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் குடும்பத்தினருடன் உறங்கி கொண்டிருந்தார்.

நேற்று அதிகாலை 25 வயதுமதிக்கத்தக்க 3 நபர்கள், முகத்தைமறைத்துக் கொண்டும் கையில் கத்தி, இரும்புக் கம்பி, கைத் துப்பாக்கியுடன் வீட்டின் முன் கிரில் கேட் பூட்டு, முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.

சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் எழுந்து பார்க்கவும், பிலவேந்திரனின் வலது புருவத்தின் மேல்கொள்ளையர்கள் கத்தியால் குத்தியுள்ளனர். மேலும், முதுகில் கம்பியால் தாக்கினர். அவரது மகன் அருண்குமார்(31) அணிந்திருந்த 2 பவுன் செயினை பறித்துக் கொண்டு, அங்கிருந்து பதிவு எண் இல்லாத கார் ஒன்றில் ஏறி, தப்பிச் சென்றுஉள்ளனர்.

கோயிலில் கொள்ளை

தொடர்ந்து ஜக்காம்பேட்டையில் வசிக்கும் தனியார் பள்ளி ஆசிரியர் குமார் என்பவர் வீட்டில் வெளியே நிறுத்தி வைத்திருந்த பைக்கை திருடியுள்ளனர். மேலும் குமார் வீட்டின் அருகே இருந்த வீரன் கோயில் பூட்டை உடைத்து, திருட முயற்சித்துள்ளனர். அங்கு எதுவும் சிக்கவில்லை.

உடனே கோயில் அருகே உள்ள,பூட்டியிருந்த ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் வரதராஜ் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து, அங்கிருந்த தொலைக்காட்சிப் பெட்டியை எடுத்துக் கொண்டு தப்பியுள்ளனர்.

தொடர்ந்து, அந்தக் கொள்ளைக் கும்பல் அருகில் உள்ள ஆவணப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தாண்டவராயன் (57) வீட்டில் கதவை தட்டி, கதவைத் திறக்குமாறு மிரட்டியுள்ளனர். வீட்டில் இருந்தவர்கள் கூச்சலிட்டதால் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பினர். பின்னர் கன்னிகாபுரம் மாரியம்மன் கோயில்தெருவில் வசிக்கும் ஞானசேகரன் வீட்டிலும் இதுபோல அந்தக் கொள்ளையர்கள் முயற்சி மேற்கொள்ள, வீட்டில் இருந்தவர்கள் சத்தமிட்டதால், அங்கிருந்து தப்ப நினைத்தகொள்ளையர்கள் தாங்கள் கொண்டுவந்த காரில் ஏறியுள்ளனர்.

விரட்டிய குடியிருப்புவாசிகள்

அடுத்தடுத்து வந்த புகார்களின் அடிப்படையில் அப்பகுதியில் விழுப்புரம் மாவட்ட எஸ்பி ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையர்கள் விட்டுச் சென்ற காரில் இருந்த ஹரியாணா மாநில பதிவெண் போலியானது என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் தொடங்கி 4.30-க்குள் நடந்துள்ளதாக தெரிகிறது. இச்சம்பவத்தால் இப்பகுதி மக்களிடையே அச்சம் நிலவுகிறது.

இதுகுறித்து வந்த புகார்களின் பேரில் திண்டிவனம், மயிலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in