Published : 18 Apr 2021 03:17 AM
Last Updated : 18 Apr 2021 03:17 AM

தமிழகத்தில் பல லட்சம் மரக்கன்றுகளை நட்டவர் விவேக் : மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் குடும்பத்தினர் புகழாரம்

தமிழகத்தில் பல லட்சம் மரங்களை நட்டவர் நடிகர் விவேக், அவரது மறைவு எங்களது குடும்பத்தை வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது என்று அப்துல் கலாமின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

ராமேசுவரத்தில் உள்ள மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பேரன் ஷேக்சலிம், விவேக் பற்றி கூறியதாவது:

அப்துல் கலாமின் அன்புக்குப் பாத்திரமானவர் விவேக். கலாமின் ‘மரம் நடுங்கள்' என்ற வார்த்தையை ஏற்று பல லட்சங்கள் மரங்களை தமிழகத்தில் நட்டவர்.

குடியரசுத் தலைவராக அப்துல் கலாம் இருந்தபோது ஒருமுறை விவேக் சென்னை ராஜ்பவனில் அவரைச் சந்தித்தார். அப்போது இருவரும் மரம் வளர்ப்பதன் முக்கியத்துவம் பற்றியும்,மரத்தை நட்டு அதை பராமரித்து வளர்ப்பதை பற்றியும், திரைப்படங்கள் மூலம் எப்படி எடுத்துச் செல்வது என்றும் ஆலோசித்தனர்.

தொடர்ந்து விவேக் படத்தில் கருத்து சொல்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், களம் இறங்கி 10 லட்சம் மரக்கன்றுகளை நடவேண் என இலக்கு நிர்ணயித்து, பல்வேறு நண்பர்களையும் இணைத்து ‘பசுமை கலாம்' என்ற இயக்கத்தை தொடங்கினார். அதன் மூலம் 10 லட்சம் மரக்கன்றுகளையும் நட்டு, அதோடு நிறுத்திவிடாமல் தொடர்ந்து மரம் நடும் பணிகளை செய்து கொண்டிருந்தார்.

பசுமை கலாம் இயக்கம் மூலமாக பல்வேறு தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து 30 லட்சத்துக்கும் மேலான மரக்கன்றுகளை நட்டு சாதனை படைப்பதற்கு, கலாமின் ‘உறக்கத்தில் வருவதல்ல கனவு; உன்னை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு..’ என்ற பொன்மொழியே காரணம்.

கலாம் மறைந்த பிறகு நடிகர் விவேக் எங்கள் குடும்பத்தினரோடு நெருக்கமாக இருந்தார். அவரது மறைவு எங்கள் குடும்பத்தை வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x