

சேலம் ஓமலூரில் உள்ள சேலம் புறநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகளுடன் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக நேற்று முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான பழனிசாமி, சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த சிலுவம்பாளையம் கிராமத்தில் தங்கியிருந்தார். நேற்று காலை சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்துக்கு வந்தார். பின்னர் மாலை சேலம் ஓமலூரில் உள்ள சேலம் புறநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்துக்கு அவர் சென்றார்.
அங்கு, சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் தேர்தலில் போட்டியிட்ட அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
தேர்தல் வாக்கு எண்ணிக்கைவரும் 2-ம் தேதி நடைபெறவுள்ளநிலையில், வாக்கு எண்ணும்மையங்களில் வேட்பாளர்கள், அவர்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக அவர் ஆலோசனையில் ஈடுபட்டதாக, அதிமுகவினர் தெரிவித்தனர். கூட்டம் 2 மணி நேரம் நடந்தது. கூட்டத்தில், சேலம் மாவட்ட அதிமுக எம்எல்ஏக்களும் கலந்து கொண்டனர்.