

சேலத்தில் 7 வயது சிறுமியை தொழிலதிபரிடம் விற்பனை செய்தது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் மற்றும் தொழில் அதிபரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், பேத்தியை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என சிறுமியின் பாட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சேலம் அன்னதானப்பட்டியைச் சேர்ந்த சின்னபொண்ணு என்பவர் சேலம் டவுன் அனைத்து மகளிர்காவல் நிலையத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அளித்த புகாரில், ‘தனது மகள், சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்த தொழிலதிபர் கிருஷ்ணன் (54) என்பவர் வீட்டில் பணிபுரிந்து வருகிறார். தனது 7 வயது பேத்தியை தொழில் அதிபரிடம் கொடுத்துவிட்டார். எனது பேத்தியை மீட்டு ஒப்படைக்க வேண்டும்’ எனத் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக சைல்டு லைன் அமைப்புக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 3 நாட்களுக்கு முன்பு சிறுமியை சைல்டு லைன் அமைப்பினர் மீட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இதற்கிடையில், சிறுமியின் தாய், தனது உறவினர் பெண்ணுடன் பேசும் ஆடியோ வாட்ஸ்அப்பில் வைரலானது. ஆடியோவில், சிறுமியின் தாய் சுமதி, “தனது மகளைரூ.10 லட்சத்துக்கு விற்பனை செய்துவிட்டதாகவும், தனது மகளை அவர் நன்றாக பார்த்துக் கொள்வார்” எனக் கூறும் உரையாடல் பதிவாகியிருந்தது.
இதையடுத்து, கிருஷ்ணன், சிறுமியின் தாய், தந்தை ஆகியோர் மீது இபிகோ 80, 81 (பணம் கொடுத்து, வாங்குவது), 370 (ஏ), 372 (குழந்தையை விற்பனை செய்வது) உள்ளிட்ட பிரிவுகளில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, 3 பேரையும் கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனைவி இல்லாத நிலையில் கிருஷ்ணன் ஏற்றுமதி நிறுவனத்தை நடத்தி வருவதும், அவரது மகன்கள் வெளிநாடுகளில் வசித்து வருவதும் விசாரணையில் தெரிந்தது. மேலும், தனது வீட்டுக்கு வேலைக்கு வரும் பெண்ணின் குழந்தையை பார்த்ததும், தன்னுடன் வைத்துக் கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடியில் இருந்த சுமதி, குழந்தையை கிருஷ்ணனிடம் ஒப்படைத்தது தெரியவந்தது. இதற்காக சுமதி எவ்வளவு பணம் பெற்றார் என்பது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் சிறுமியின் பெற்றோர் மற்றும் கிருஷ்ணன் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். மேலும், சிறுமிக்கு பாலியல்ரீதியான துன்புறுத்தல் ஏற்பட்டதா என்பது குறித்தும் விசாரிக்கின்றனர்.
பாட்டி குற்றச்சாட்டு
எனது பேத்தியை ஏற்காடு, கோவா உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு கிருஷ்ணன் அழைத்து சென்றுள்ளார். இதுதொடர்பாக சுமதியிடம் கேட்கும்போது, சரியான பதில் கூறுவதில்லை. நானே கிருஷ்ணன் வீட்டுக்கு சென்று, பேத்தியைபார்க்க முடியாமல் திரும்பி வந்துள்ளேன். பேத்தியைப் பார்க்க வேண்டும் என கிருஷ்ணனிடம் சண்டை போட்டுள்ளேன். இதனால், காவல் நிலையத்தில் புகார் செய்தேன். காப்பகத்தில் உள்ள மற்றொரு பேத்தி உட்பட 2 பேத்திகளையும் என்னுடன் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.