Last Updated : 10 Apr, 2021 03:12 AM

 

Published : 10 Apr 2021 03:12 AM
Last Updated : 10 Apr 2021 03:12 AM

ஒரே எண்ணில் இயங்கிய 2 கார்கள் அதிகாரிகள் குழப்பம்; போலீஸில் புகார் :

சிவகங்கை

சிவகங்கை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு ஒரே எண்ணுடன் 2 கார்கள் வந்ததால் அதிகாரிகள் குழப்பமடைந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் அழகாபுரத்தைச் சேர்ந்த முத்துதுரை, தூத்துக்குடியைச் சேர்ந்த உமாதேவியின் பழைய இனோவா காரை (டி.என்.69 ஏஎம் 4777) விலைக்கு வாங்கினார். கார் உரிமையாளரின் பெயரை மாற்ற முத்துதுரை தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு வந்தார்.

ஆனால், இதே எண்ணுடன் உள்ள காரை சிவகங்கையைச் சேர்ந்த முத்துகணேஷ் என்பவருக்கு சிவகங்கை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பெயர் மாற்றம் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துதுரை, காரை விற்பனை செய்த உமாதேவியை சிவகங்கை வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு அழைத்து வந்தார். அப்போதே முத்துக்கணேஷ் என்பவரும் காரில் அங்கு வந்தார்.

ஒரே சமயத்தில் இரு கார்களையும் பார்த்த அதிகாரிகள் குழப்பமடைந்தனர். மேலும் 2 கார்களின் நிறம், நம்பர், இன்ஜின் நம்பர், ஆவணங்களை ஆய்வு செய்தபோது ஒரே மாதிரியாக இருந்தன. விசாரணையில், 2014-ம் ஆண்டில் இன்னோவா காரை வாங்கியதாகவும், தற்போது புது கார் வாங்குவதற்காக இந்த காரை விற்பனை செய்ததாகவும் உமாதேவி தெரிவித்தார்.

அதேபோல், ‘மதுரை தரகர் மூலம் தூத்துக்குடி தனியார் கார் விற்பனை நிலையத்தில் காரை 20 நாட்களுக்கு முன் வாங்கியதாக முத்துகணேஷ் தெரிவித்தார். இதையடுத்து எது போலி, உண்மை என விசாரிக்க வட்டார போக்குவரத்து அதிகாரிகள் போலீஸில் புகார் அளித்தனர்.

சிவகங்கை வட்டார போக்குவரத்து அலுவலர் கல்யாணகுமார் கூறுகையில், ‘‘ஆவணங்கள் சரியாக இருந்ததால் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஆவணத்தை அச்சு, அசலாக பிரதி எடுத்துள்ளனர். இதனால் ஆவணம் போலி என்பதை கண்டறிய முடியவில்லை. 2 ஆவணங்களிலும் காரின் முதல் உரிமையாளர் பெயர் உமாதேவி என்று உள்ளது. புகைப்படம் மட்டும் போலி ஆவணத்தில் வேறுபெண்ணின் படம் உள்ளது. போலீஸ் விசாரணைக்குப் பின் முறைகேடு குறித்த விவரம் தெரிய வரும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x