Published : 09 Apr 2021 03:12 AM
Last Updated : 09 Apr 2021 03:12 AM

தேர்தல் விதிகள் அமலில் இருக்கும்போது - துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநர் அவசரம் காட்டுவது ஏன்? : திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் கேள்வி

தேர்தல் விதிகள் அமலில் இருக்கும்போது புதிய துணைவேந்தர்களை நியமனம் செய்வதில் ஆளுநர் அவசரம் காட்டுவது ஏன் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் பொதுத் தேர்தல் கடந்த 6-ம் தேதிதான் நடந்து முடிந்திருக்கிறது. ஆட்சி மாற்றத்துக்கான சூழலை இந்த தேர்தல் உருவாக்கிருக்கின்ற நல் தருணம் இது. புதிய அரசு பல புதிய சிந்தனை திட்டங்களோடு பதவிக்கு வரும் என்ற நிலை மிக தெளிவாக தெரிகிறது.

வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு இருந்தால், தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி பதவி ஏற்றிருக்கும்.

ஆனால், வாக்கு எண்ணிக்கைக்கு இடைப்பட்ட இந்த ஒருமாதம் எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதுதான் மரபு.

பதவிக்கு அழகு அல்ல

புதிய அறிவிப்புகளை, அதுவும் பல்வேறு பல்கலைக்கழகங்களில் அதன் நிர்வாகப் பொறுப்பை பல ஆண்டுகளுக்கு ஏற்கப் போகும் துணைவேந்தர்களின் பெயர்களை அவசர அவசரமாக வெளியிட்டு இருப்பது ஆளுநர் பதவிக்கு அழகு அல்ல.

காந்திகிராமம் கிராமிய பல்கலைக்கழக துணைவேந்தராக எஸ்.மாதேஸ்வரன், கால்நடை பல்கலைக்கழக துணைவேந்தராக டாக்டர் செல்வகுமார் ஆகியோரை ஆளுநர் நியமித்துள்ளதாக செய்தித்தாள்களில் அறிவிப்புகள் வெளிவந்துள்ளன.

இமயமலை பிளந்துவிடுமா?

பல நாட்களாக நிரப்பப்படாமல் இருந்த இந்த பதவிகளை புதியஅரசு வந்து நிரப்பினால் இமயமலை என்ன இரண்டாகவா பிளந்துவிடும்.

இந்த இரண்டு போதாது என்று தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாய உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதனை மத்திய அரசு அதன் பங்குக்கு நியமித்து இருக்கிறது.

‘தேர்தல் வருவதற்கு முன்பு நடைமுறையில் இருந்த விஷயங்கள்தான் இவை. இதில் எந்த அரசியல் நோக்கமும் கிடையாது’ என்று ஆயிரம் காரணங்களை ஆளுநர் மாளிகை கூறினாலும், பொறுத்ததுதான் பொறுத்தீர், இன்னும் ஒரு மாதம் ஏன் பொறுக்கக் கூடாது என்பதுதான் என் கேள்வி.

சென்னை பல்கலையின் நிலை

முறையான துணைவேந்தர்களை நியமிக்காததால், உலகப்புகழ் பெற்ற சென்னை பல்கலைக்கழகம் எப்படி சீர்கெட்டு அழிந்து நிற்கிறது என்பதை பல்வேறு ஊடகங்கள் எடுத்துக் காட்டி இருக்கின்றன.

முடிந்தால் இதை ஆளுநரின் பார்வைக்கு அவரது செயலாளர்கள் கொண்டு செல்லட்டும். இந்த அவசரம் ஆளுநருக்கு அழகு அல்ல.

இவ்வாறு அந்த அறிக்கையில் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x