Published : 09 Apr 2021 03:12 AM
Last Updated : 09 Apr 2021 03:12 AM

தமிழகத்தில் கரோனா தொற்று இம்மாத இறுதியில் உச்சத்தை தொடும் : சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிக்கைபுதிதாக 4,276 பேருக்கு தொற்றுஒரே நாளில் 19 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் புதிதாக 4,276 பேருக்குகரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இளைஞர்கள், முதியவர்கள் உட்பட 19 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கரோனா தொற்று இம்மாத இறுதியில் உச்சம் தொடும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக சுகாதாரத் துறைஅதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் அதிகரித்து வரும் கரோனா தொற்றை கட்டுப்படுத்த, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். ஆனால், பொதுமக்கள் தொடர்ந்து அலட்சியம் காட்டுவதால், தொற்று பரவலை தடுக்க முடியவில்லை. இதனால், ஒரே குடும்பத்தில் 10-க்கும்மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்படும் சூழல் ஏற்படுகிறது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, எவ்விதஅறிகுறியும் இல்லாமல் பலர் சுற்றி வருகின்றனர். அவர்களை அடையாளம் காண்பது சவாலாக உள்ளது.

அவர்களிடம் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள, முகக் கவசம் மட்டுமே ஆயுதமாக உள்ளது.முகக் கவசம் அணியாமல் இருக்கும் பட்சத்தில், கரோனா வைரஸ், ஓர் உடலில் இருந்து மற்றொரு உடலுக்கு செல்லும்போது, அதன் வீரியம் அதிகமாக உள்ளது.

நடந்து முடிந்த தேர்தல் பிரச்சார கூட்டங்களிலும், இதே பிரச்சினையைத்தான் மக்கள் சந்தித்துள்ளனர். எனவே, தொற்று வேகம் அதிகரித்து, இம்மாத இறுதியில் உச்சத்தை தொடும். பாதிப்புகள் அதிகரிக்கும்போது கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். தொற்றை தடுக்க, அனைவரும் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும். 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

4,276 பேருக்கு தொற்று

தமிழகத்தில் நேற்று புதிதாக 2,593 ஆண்கள், 1,683 பெண்கள் என மொத்தம் 4,276 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 1,520 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 9 லட்சத்து 15 ஆயிரத்து 386 ஆக அதிகரித்துள்ளது. இதில், சென்னையில் மட்டுமே 2 லட்சத்து 59 ஆயிரத்து 320 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுவரை தமிழகம் முழுவதும் மொத்தம் 8 லட்சத்து 72 ஆயிரத்து 415 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 1,869 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். சென்னையில் 11,633 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 30,131 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கரோனாவால் அரசு, தனியார் மருத்துவமனைகளில் நேற்று மட்டும் 19 பேர் உயிரிழந்தனர். இவர்கள் 33 முதல் 91 வயதுக்கு உட்பட்டவர்கள். இதன்மூலம், தமிழகத்தில்கரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12,840 ஆக உயர்ந்துள்ளது. இதில், சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 4,292 பேர் இறந்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எஸ்பி.முத்துராமனுக்கு தொற்று

இலக்கிய நிகழ்ச்சிகள், திரைப்பட விழாக்களில் தொடர்ந்து பங்கேற்று வந்த திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமனுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரைவில் அவர் இயல்பு நிலைக்கு திரும்புவார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தேர்தல் பணியில் தொடர்ந்து ஈடுபட்டிருந்த ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜுக்கு கரோனா அறிகுறி இருந்ததால், வாலாஜா அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்துகொண்டார். தொற்று உறுதியானதால், வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

துரைமுருகனுக்கு லேசான கரோனா

திமுக பொதுச் செயலாளரும், காட்பாடி தொகுதி திமுக வேட்பாளருமான துரைமுருகன், 82-வது வயதிலும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். கட்சிப் பணிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்ததால், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கரோனா பரிசோதனை செய்துகொண்டார். இதில், லேசான கரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, வீட்டிலேயே அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். மருத்துவர்கள் ஆலோசனைப்படி, வீட்டில் இருந்தபடியே சில நாட்களுக்கு மருத்துவ சிகிச்சைகளை மேற்கொண்டு ஓய்வெடுக்க உள்ளார். அவர் ஏற்கெனவே 2 தவணை கரோனா தடுப்பூசியும் போட்டுக் கொண்டுள்ளதால், தீவிர கரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்பு மிகவும் குறைவு என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x