Published : 09 Apr 2021 03:12 AM
Last Updated : 09 Apr 2021 03:12 AM

அரசுப் பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதி விபத்து - கடலூர் அருகே 3 பேர் உயிரிழப்பு; 40 பேர் படுகாயம் :

கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே நேற்று அதிகாலை அரசு சொகுசு விரைவுப் பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதியதில் அரசு பேருந்து ஓட்டுநர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.

வேளாங்கண்ணி பேருந்து நிலையத்தில் இருந்து சென்னைக்கு அரசு விரைவு சொகுசுப் பேருந்து ஒன்று நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு புறப்பட்டது. பேருந்தைநாகையைச் சேர்ந்த ஓட்டுநர் சிவக்குமார் (42) ஓட்டிச் சென்றார்.

நேற்று அதிகாலை 2.30 மணியளவில் கடலூர் மாவட்ட புதுச்சத்திரத்தை அடுத்த மேட்டுப்பாளையம் என்ற இடத்தில் அபாயகரமான வளைவை கடந்து சென்றபோது, எதிரே கடலூரில் இருந்து சிதம்பரத்தை நோக்கி வந்த மீன் பாடி லாரி மீது பேருந்து பயங்கரமாக மோதியது.

இதில், பேருந்தின் முன்பக்கம் சுக்கு நூறாக நொறுங்கி, சாலையோரத்தில் கவிழ்ந்தது. விபத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் சிவக்குமார் (42) மற்றும் பயணிகளான தரங்கம்பாடியைச் சேர்ந்த அன்பரசன் (37), நாகையைச் சேர்ந்த வைரவன் (20) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பேருந்துக்குள் சிக்கியவர்கள் வெளியே வர முடியாமல் தவித்தனர்.

பயங்கர சத்தம் கேட்டு, அங்குவந்த கிராம மக்கள், பேருந்து கண்ணாடிகளை உடைத்து பயணிகளை மீட்டனர். ஆனாலும், சிலர் பேருந்துக்குள் சிக்கியிருந்தனர். தகவலஅறிந்து வந்த போலீஸார் கிரேன் உதவியுடன் பேருந்தை தூக்கி நிறுத்தி பயணிகளை மீட்டனர்.

விபத்தில் சிக்கிய 18 பேர்படுகாயங்களுடன் கடலூர்தலைமை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சிதம்பரம் அரசு மருத்துவமனையில் 4 பேர், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 18 சேர்க்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x