Published : 07 Apr 2021 03:16 AM
Last Updated : 07 Apr 2021 03:16 AM

சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்த தலைவர்கள் :

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்நேற்று நடைபெற்றது. தெலங்கானா ஆளுநர் தமிழிசைசவுந்தரராஜன், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தனர்.

தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விருகம்பாக்கம் கிரான்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், தமிழக முதல்வர் பழனிசாமி எடப்பாடி தொகுதியில் உள்ள சிலுவம்பாளையம் அரசு தொடக்கப் பள்ளியிலும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேனி் மாவட்டம், பெரியகுளம் தென்கரை தெற்கு அக்ரஹாரம் செவன்த்டே நர்சரி பள்ளியிலும், சட்டப்பேரவைத் தலைவர் பி.தனபால் சேலம் அன்னதானப்பட்டி குகை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் வாக்களித்தனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தன் மனைவி துர்கா, மகன் உதயநிதி ஆகியோருடன் தேனாம்பேட்டை எஸ்ஐஇடி கல்லூரிக்குச் சென்று வாக்களித்தார்.

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ சென்னைநெற்குன்றம் ஆர்.எம்.மெட்ரிக் பள்ளியிலும், புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி அங்குள்ள மாதா கோயில் வீதி, சைமன் கர்தினால் லூர்துசாமி அரசு பெண்கள் பள்ளியிலும், என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி புதுச்சேரி திலாசுப்பேட்டை விநாயகர் கோயில் வீதி அரசு நடுநிலைப் பள்ளியிலும் வாக்களித்தனர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சிதம்பரம் கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள சென்னை மாநகராட்சி உள்விளையாட்டு அரங்கிலும், மதிமுக பொதுச்செயலர் வைகோ தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகில் உள்ள கலிங்கப்பட்டியிலும், திமுக பொதுச்செயலர் துரைமுருகன் காட்பாடி டான்பாஸ்கோ பள்ளியிலும், நாம் தமிழர் கட்சி தலைமைஒருங்கிணைப்பாளர் சீமான்வளசரவாக்கத்தில் வேளாங்கண்ணி பள்ளியிலும், அமமுக பொதுச்செயலர் டிடிவி.தினகரன்சென்னை அடையாறு தாமோதரபுரம் நடுநிலைப் பள்ளியிலும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சென்னை ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள வாக்குச்சாவடியிலும், நடிகையும் ஆயிரம் விளக்கு பாஜக வேட்பாளருமான குஷ்புமயிலாப்பூர் சைதன்யா பள்ளியிலும், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விருகம்பாக்கம் தொகுதியில் உள்ளகாவேரி பள்ளியிலும் வாக்களித்தனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா சென்னை தியாகராய நகர் வெட்கட்ராமன் சாலையில் உள்ள தக்கர் பாபா வித்யாலயா பள்ளியிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு சென்னை சிஐடி நகரில் உள்ள மாநகராட்சி பள்ளியிலும், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சென்னை அடையாறு, சென்னை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியிலும் வாக்களித்தனர்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆழ்வார்பேட்டை சென்னை மேல்நிலைப் பள்ளியிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரா.முத்தரசன் திருத்துறைப்பூண்டி, வேளூர் அரசு உதவிபெறும் பள்ளியிலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அரியலூர் மாவட்டம் அங்கனூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் திருச்சி கிழக்குத் தொகுதி, காஜா நகர் ஜாமியான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும் வாக்களித்தனர்.

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் திண்டிவனம் மரகாதாம்பிகை தொடக்கப் பள்ளியிலும், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தனது மனைவி ராதிகாவுடன் கொட்டிவாக்கம் செயின்ட் ஆண்டனிஸ் தொடக்கப் பள்ளியிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் சிதம்பரம் நகராட்சி நடுநிலைப் பள்ளியிலும், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் நெய்வேலி தொகுதிக்கு உட்பட்ட புலியூர் காட்டுசாகை தொடக்கப் பள்ளியிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் ஜி.ராமகிருஷ்ணன் ஆதம்பாக்கம் புனித மார்க்ஸ் உயர்நிலைப் பள்ளியிலும், டி.கே.ரங்கராஜன் தியாகராய நகர்ராமகிருஷ்ணா மிஷன் ஆண்கள்மேல்நிலைப் பள்ளியிலும், அ.சவுந்தரராசன் கொளத்தூர் கம்பர் நகர் டானிஷ் மேல்நிலைப் பள்ளியிலும் வாக்களித்தனர்.

மக்களவை முன்னாள் துணைசபாநாயகர் தம்பிதுரை பர்கூர்தொகுதியில் உள்ள சிந்தகம்பள்ளியிலும், சட்டப்பேரவை துணைசபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பொள்ளாச்சி திப்பம்பட்டி அரசு பள்ளியிலும், பாஜக தேசிய தலைவர் வானதி சீனிவாசன் கோவை டாடாபாத் டாக்டர்அழகேசன் சாலை, காமராஜர் மெட்ரிக் பள்ளியிலும், பாமக தலைவர் ஜி.கே.மணி பென்னாகரம் தொகுதி, அஜ்ஜன அள்ளி அரசுப்பள்ளியிலும், தமாகா இளைஞரணித் தலைவர் எம்.யுவராஜா செங்கோடம்பள்ளம் அரசு பள்ளியிலும் வாக்களித்தனர்.

கொமதேக வேட்பாளர் ஈஸ்வரன் சென்னை அண்ணா நகரிலும், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு திருவண்ணாமலையை அடுத்த சே.கூடலூர் ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப் பள்ளியிலும், ஆத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி திண்டுக்கல் நகரில் உள்ள வாசவிமெட்ரிக் பள்ளியிலும், ஒட்டன்சத்திரம் தொகுதி திமுக வேட்பாளர் அர.சக்கரபாணி கள்ளிமந்தையத்திலும், நத்தம் தொகுதி அதிமுக வேட்பாளர் நத்தம் ஆர்.விசுவநாதான் வேம்பார்பட்டியில் உள்ள பள்ளியிலும், நத்தம் தொகுதி திமுகவேட்பாளர் ஆண்டிஅம்பலம் பாலப்பநாயக்கன்பட்டியிலும், எம்ஆர்கே.பன்னீர்செல்வம் காட்டுமன்னார்கோவில் தொகுதி, முட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஈரோடு கச்சேரி வீதி மாநகராட்சி பள்ளியிலும் வாக்களித்தனர்.

பாதுகாப்பு கவசத்துடன் கனிமொழி வாக்குப்பதிவு

திமுக மகளிரணிச் செயலாளரும், எம்.பியுமான கனிமொழிக்கு சில நாட்களுக்கு முன்பு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மருத்துவர்களின் அறிவுரைப்படி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்குப்பதிவு செய்யலாம் என்றும் மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை ஒரு மணி நேரம் தனியாக ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. அதன்படி, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கனிமொழி ஆம்புலன்ஸில் மயிலாப்பூர் புனித எப்பாஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு உரிய பாதுகாப்பு கவசங்கள் அணிந்து வந்து வாக்களித்துவிட்டுச் சென்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x