Published : 24 Mar 2021 03:14 AM
Last Updated : 24 Mar 2021 03:14 AM

அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் முகம்மது ஜான் காலமானார் : ஆளுநர், முதல்வர், துணை முதல்வர் இரங்கல்

அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் முகம்மது ஜான் நேற்று மாலைமாரடைப்பால் காலமானார். ஆளுநர், முதல்வர், துணை முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ராணிப்பேட்டை முகமதியர் தெருவைச் சேர்ந்தவர் ஏ.முகம்மது ஜான்(72). அதிமுக மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர் ஏ.முகம்மது ஜான். தமிழ்நாடு வக்ஃபு வாரிய தலைவராக இருந்த அவர், ராணிப்பேட்டை அதிமுக வேட்பாளர் எஸ்.எம்.சுகுமாருக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

நேற்று மதிய உணவுக்காக வீட்டுக்குச் சென்றவர் மாலை 4.30 மணியளவில் வீட்டில் இருந்து பிரச்சாரத்துக்காக புறப்பட தயாரானபோது, அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது, வாலாஜா அரசுமருத்துவமனையில் அவர் உடனடியாக அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களின் பரிசோதனையில் அவர் ஏற்கெனவே மாரடைப்பால் உயிரிழந்தது தெரியவந்தது.

முகம்மது ஜான் கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் ராணிப்பேட்டை தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்றவர். மேலும், தமிழக பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார்.

தலைவர்கள் இரங்கல்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்: மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான் திடீர் மறைவு செய்திக் கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். மிகச் சிறந்த தொழிலதிபரான அவர் தனது வாழ்நாள் முழுவதையும் தமிழக மக்களின் நலனுக்கு செலவிட்டார். அவரது மறைவு தமிழகத்துக்கும், அதிமுகவுக்கும் பேரிழப்பாகும்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் பழனிசாமி: அதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு இணைச் செயலரும் தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான அ.முகம்மது ஜான் காலமான செய்தி கேட்டு ஆற்றொண்ணாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தோம்.

ஆரம்ப கால அதிமுக தொண்டரான முகம்மது ஜான் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் மீதும், தொடர்ந்து கட்சித் தலைமை மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு, பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியவர். ஜெயலலிதாவின் ஆட்சியில் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்களுக்கு இந்த துயரத்தை தாங்கிக் கொள்ளும் சக்தி, தைரியத்தை அளிக்கவேண்டும் என்றும், அவரது ஆன்மாஇறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும் இறைவனை பிரார்த்திக்கிறோம்.

திமுக தலைவர் ஸ்டாலின்: அதிமுக மாநிலங்களவை உறுப்பினரான முகமது ஜான் திடீர் மறைவு செய்தி கேட்டு பேரதிர்ச்சிக்கு உள்ளானேன். தமிழகத்தின் குரலாக ஒலித்துக் கொண்டிருந்த அவரது மறைவு தமிழக மக்களுக்கு பேரிழப்பாகும். அவரது மறைவுக்கு திமுக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான் மறைவு செய்திக் கேட்டு வேதனை அடைந்தேன். அவர் மிகவும் எளிமையானவர், மக்களிடம் நெருங்கிப் பழகக் கூடியவர். அவரது மறைவு அதிமுகவுக்கு இழப்பாகும்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகைதீன்: தமிழ்நாடு வக்ஃபு வாரிய தலைவரும், முன்னாள் அமைச்சருமான முகம்மது ஜான்திடீர் மரணம் செய்திக் கேட்டு வேதனையும், துக்கமும் அடைந்தேன். நேர்மைக்கும், தூய்மைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கிய அவரது மறைவு, தமிழக முஸ்லிம் சமுதாயத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்: அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான முகம்மது ஜான் மறைவு செய்திக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், அதிமுகவினர் உள்ளிட்ட அனைவருக்கும் பாமக சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முகம்மது ஜான் கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் ராணிப்பேட்டை தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x