Published : 20 Mar 2021 03:14 AM
Last Updated : 20 Mar 2021 03:14 AM

தமிழர்களின் சுயமரியாதையை காப்பதற்கான தேர்தல் : ஒரத்தநாடு பிரச்சாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து

இந்தத் தேர்தல் நாம் பொறுப்புக்கு வருவதற்கான தேர்தல் அல்ல, தமிழர்களின் சுயமரியாதைக்கான தேர்தல் என்பதை மறக்கக் கூடாதுஎன திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் திருவிடைமருதூர் கோவி.செழியன், கும்பகோணம் க.அன்பழகன், திருவையாறு துரை.சந்திரசேகரன், தஞ்சாவூர் டிகேஜி நீலமேகம், ஒரத்தநாடு எம்.ராமச்சந்திரன், பட்டுக்கோட்டை க.அண்ணாதுரை, பேராவூரணி என்.அசோக்குமார்,பாபநாசம் மமக வேட்பாளர் ஜவாஹிருல்லா ஆகியோரை ஆதரித்து,ஒரத்தநாட்டில் நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

தலைவர் கருணாநிதி பிறந்தமாவட்டத்துக்கு வந்திருக்கிறேன். இந்த தஞ்சாவூர் கோட்டையிலே கருணாநிதியின் கால் படாத இடங்களே இருக்க முடியாது. அப்படிப்பட்ட கருணாநிதி டெல்டா விவசாயிகளுக்கு துரோகம் செய்துவிட்டார் என்று முதல்வர் பழனிசாமி பேசியிருக்கிறார். முதல்வரே, உங்கள் நாக்கு அழுகிப் போய்விடும்.

காவிரி உரிமையை மீட்டுக்கொடுத்து, 50 ஆண்டுகளாக காப்பாற்றிக் கொடுத்தவர் கருணாநிதி. அந்த உரிமையை மத்திய அரசின் ஜல்சக்தி துறையிடம் அடகுவைத்த துரோகிதான் முதல்வர் பழனிசாமி. அவர்தான் கருணாநிதி துரோகம் செய்துவிட்டதாக பேசுகிறார். காவிரிக் கரையில் பிறந்து, காவேரி மருத்துவமனையில் உயிர்பிரியும்வரை, காவிரி உரிமைக்காகப் போராடியவர் கருணாநிதி.

மேலும், ஒரு விவசாயி ஆள்வது ஸ்டாலினுக்கு பிடிக்கவில்லைஎன்றும் முதல்வர் சொல்லியிருக்கிறார். விவசாயி என்றால் எனக்குப்பிடிக்கும். ஆனால், போலி விவசாயியைப் பிடிக்காது. பச்சை துண்டைப் போட்டுக்கொண்டு பச்சை துரோகியாக இருக்கக்கூடிய விவசாயியை எனக்குப் பிடிக்காது.

முதல்வர் உண்மையான விவசாயியாக இருந்தால், விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்தபோது, அதை எதிர்த்திருக்க வேண்டும். வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின்போது, 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிர் இழந்திருக்கின்றனர். தற்போதும், டெல்லியிலேபோராட்டத்தை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அப்படிபோராட்டம் நடத்திக்கொண்டிருக் கும் விவசாயிகளைப் பார்த்து, ‘இடைத்தரகர்’ என முதல்வர் பழனிசாமி கொச்சைப்படுத்தி இருக்கிறார்.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என சொல்லிவிட்டு, நீதிமன்றத்தில் எந்த விதிமுறையும் வகுக்கவில்லை என்று சொன்ன நீங்கள் ஒரு விவசாயியே கிடையாது.

தமிழ் மண்ணிலே இந்தியைத் திணித்து, நீட் தேர்வை திணித்து, மதவெறியைத் தூண்டக்கூடியவர்களுக்கு நான் சொல்வது என்னவென்றால், இது பெரியார் மண்,அண்ணா - கருணாநிதி பிறந்த மண்.இந்த மண்ணில் உங்களுடைய மோடி மஸ்தான் வேலை எடுபடாது. இது தமிழனின் சுயமரியாதைக்கான தேர்தல். இந்தத் தேர்தல் நாமெல்லாம் பொறுப்புக்கு வரவேண்டும் என்பதற்காக அல்ல, நம்முடைய சுயமரியாதையைக் காப்பதற்கான தேர்தல் என்பதை மறக்கக் கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x