Published : 17 Mar 2021 03:14 AM
Last Updated : 17 Mar 2021 03:14 AM

பயிர்க்கடன் தள்ளுபடி செய்ததுகூட தெரியாமல் ஸ்டாலின் தேர்தல் அறிக்கை வெளியிடுகிறார் : தமிழக முதல்வர் பழனிசாமி விமர்சனம்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசுகிறார் முதல்வர் பழனிசாமி.

புதுக்கோட்டை

பயிர்க் கடன் தள்ளுபடி செய்ததுகூட தெரியாமல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கைவெளியிடுகிறார் என தமிழக முதல்வர் பழனிசாமி குற்றம்சாட்டினார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களான மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் (விராலிமலை), வி.ஆர்.கார்த்திக் தொண்டைமான் (புதுக்கோட்டை), பி.கே.வைரமுத்து (திருமயம்), மு.ராஜநாயகம் (அறந்தாங்கி), தர்ம.தங்கவேல் (ஆலங்குடி), ஜெயபாரதி (கந்தர்வக்கோட்டை) ஆகியோரை ஆதரித்து முதல்வர் பழனிசாமி அந்தந்தத் தொகுதிகளுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பேசினார்.

அப்போது அவர் பேசியது: தமிழகத்தில் நீர் மேலாண்மையில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக ரூ.14,400 கோடிமதிப்பில் காவிரி-தெற்கு வெள்ளாறு - வைகை - குண்டாறு இணைப்பு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. விராலிமலையில் ஐடிசி பிஸ்கெட் தொழிற்சாலை மூலம் 3,000 பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

பொதுவாக விவசாயக் கடன்கள் ரத்து என்பதை தேர்தல் அறிக்கையில் அரசியல் கட்சிகள் வெளியிடும். ஆனால், தேர்தலுக்கு முன்னதாகவே கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடன்களை அதிமுக அரசு ரத்து செய்திருக்கிறது. ஆனால், இதுகூட தெரியாமல் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளின் கடன்கள் ரத்து செய்யப்படும் என திமுகதலைவர் ஸ்டாலின் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதவிர, கூட்டுறவு சங்கங்களில் பெற்ற சுயஉதவிக் குழுக் கடன், 6 பவுன் வரையிலான நகைக் கடனும் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துள்ளோம்.

24 மணி நேர மும்முனை மின்சாரம்

ஏப்.1-ம் தேதி முதல் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் விநியோகிக்கப்படும். அனைத்து குடும்பங்களுக்கும் மாதந்தோறும் 6 காஸ் சிலிண்டர், வாசிங்மெஷின், குடும்பத்துக்கு மாதந்தோறும் ரூ.1,500,கல்விக்கடன் ரத்து என பல்வேறுதிட்டங்கள் அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

கரோனாவிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள அனைவரும் குடும்பத்தோடு சென்று அரசு மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளுங்கள். முஸ்லிம் மக்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழகம் விளங்கிக்கொண்டு இருக்கிறது.

இருந்த இடத்தில் இருந்தே1100 என்ற எண்ணுக்கு தொடர்புகொண்டு தெரிவிக்கப்படும் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. ஆனால், ஸ்டாலினோ ஆட்சியில் இருந்தபோது மக்களை சந்திக்காமல் இருந்துவிட்டு, தற்போது மக்களை சந்தித்து, கோரிக்கை மனுக்களை வாங்கி பெட்டியில் போட்டு பூட்டி சீல் வைத்து சென்றுள்ளார். மீண்டும்அதிமுக அரசுதான் அமையும். எனவே, ஸ்டாலினால் பூட்டப்பட்ட பெட்டி ஒருபோதும் திறக்கப்படமாட்டாது.

தமிழகத்தில் ஏற்கெனவே மக்களை நேரில் சந்தித்து பெறப்பட்ட 9 லட்சத்து 75 ஆயிரம் மனுக்களில் 5 லட்சத்து 25 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

எனது 4 ஆண்டுகால ஆட்சியில்நிறைய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால், எதுவுமே செய்யாததைப் போன்று ஸ்டாலின் அவதூறு பரப்பி வருகிறார்.

வாரிசு அரசியல்

2 ஆண்டுகளுக்கு முன்பு இனிமேல் எங்கள் குடும்பத்தில் இருந்து யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தற்போது, உதயநிதி போட்டியிடுவதாக அதே ஸ்டாலினே அறிவிக்கிறார். எனவே, வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக இந்த தேர்தல் இருக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x