பிளஸ் 2 செய்முறை தேர்வு ஏப்.16-ல் தொடக்கம் :  23-ம் தேதி வரை நடக்கிறது; தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

பிளஸ் 2 செய்முறை தேர்வு ஏப்.16-ல் தொடக்கம் : 23-ம் தேதி வரை நடக்கிறது; தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

Published on

பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு, ஏப்ரல் 16-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் சி.உஷாராணி முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:

பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும்மாணவர்களுக்கு, எழுத்துத் தேர்வுகளுக்கு முன்பாகவே செய்முறைத் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. அதன்படி, பொதுப்பிரிவு மற்றும் தொழிற்கல்வி பாடங்களுக்கான செய்முறைத் தேர்வுகள் ஏப்ரல் 16-ம் தேதி முதல் 23-ம் தேதி வரையிலான நாட்களில் கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும். இதில் பங்கேற்காத மாணவர்களின் பதிவெண் விவரங்களை உரிய விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பவேண்டும்.

மாணவர்களுக்கான வெற்றுமதிப்பெண் பட்டியலை ஏப்ரல் 8-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். மேலும், செய்முறைத் தேர்வில் மாணவர்களுக்கு வழங்கும் மதிப்பெண்களை இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்யப்பட்ட மதிப்பெண் பட்டியலில் பதிவு செய்யவேண்டும். தேர்வுமதிப்பெண் பட்டியலை பள்ளி வாரியாக கட்டுகளாகக் கட்டி மே 6-ம்தேதிக்குள் மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநரிடம் ஒப்படைக்கவேண்டும். தலைமை ஆசிரியர்கள் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநரை அணுகி, செய்முறை தேர்வை நடத்துவதற்கான முன்பணத்தை காசோலையாக பெற்றுக்கொள்ள வேண்டும்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in