

குஷ்புவை பாஜக ஒருபோதும் கைவிடாது என்று அக்கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர்வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
ஹரியாணா மாநிலத்தில் காங்கிரஸ் நடத்திய போராட்டத்தில்பெண்களை முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹோடாஇழிவுபடுத்தியதாக கூறி, சென்னையில் பாஜக மகளிர் அணியின் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு பாஜக தேசிய மகளிர் அணியின் தலைவர் வானதி சீனிவாசன் தலைமை தாங்கினார். இதில் குஷ்பு உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர், வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காங்கிரஸ் கட்சி ஒருபோதும் பெண்களுக்கு மரியாதை கொடுப்பதில்லை. பெண்களை இழிவுபடுத்தியதற்காக காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும். திமுக உள்ளிட்ட கட்சிகளும் பெண்களுக்கு மரியாதை கொடுப்பதில்லை.
தொகுதி ஒதுக்கீடு திருப்தி
மத்திய அரசின் திட்டங்களால் தமிழகம் அதிக பலன் பெற்றிருப்பது மட்டுமின்றி இடைத்தரகர்கள் இன்றி மக்களுக்கு உதவிகள் சென்றுள்ளது. நாங்கள் குடும்பக் கட்சி அல்ல. உழைப்பவர்கள் அனைவருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும். குஷ்புவை பாஜக ஒருபோதும் கைவிடாது. அவருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
குஷ்பு செய்தியாளர்களிடம் கூறும்போது, "தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்றுவரவில்லை. பாஜக மீது நம்பிக்கை வைத்துதான் வந்துள்ளேன். தமிழகம் முழுவதும் பிரச்சார சுற்றுப்பயணம் செய்வேன். அசாம், மேற்கு வங்கத்துக்கும் பிரச்சாரம் மேற்கொள்ள செல்வேன்" என்றார்.