Published : 13 Mar 2021 03:12 AM
Last Updated : 13 Mar 2021 03:12 AM

தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கான - வேட்புமனு தாக்கல் தொடங்கியது : ஓபிஎஸ், நயினார் நாகேந்திரன் உட்பட 59 பேர் மனு தாக்கல்

சென்னை

தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்தொடங்கியது. போடிநாயக்கனூரில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திருநெல்வேலியில் பாஜக மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட 59 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது.

தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவித்தபடி, தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்களின் அலுவலகங்களிலும் வேட்புமனு தாக்கல் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது.

கட்டுப்பாடுகள், வசதிகள்

முன்னதாக, கரோனா பரவல்காரணமாக, வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய வருவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், பல வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.

தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகங்களில், வேட்பாளர்கள் உள்ளே வருவதற்கும், அவர்கள் காத்திருப்பதற்கும் பிரத்யேகமாக தடுப்புகள் அமைத்து வசதி செய்யப்பட்டிருந்தது. அவர்களுக்கு வழிகாட்டுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

2 வாகனங்கள் அனுமதி

வேட்பாளருடன் 2 பேர் மட்டுமேதேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். அலுவலகத்துக்கு 100 மீட்டர் சுற்றளவுக்குள் 2 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. மற்ற வாகனங்களை அதற்கு முன்பாகவே காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.

வேட்புமனு விண்ணப்பத்தை தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம். அல்லது, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரியின் இணையதளங்களில் பூர்த்தி செய்து பதிவிறக்கம் செய்யலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

ஆன்லைனில் டெபாசிட்

வழக்கமாக, வேட்பாளர்கள் தங்களது வைப்புத் தொகையை (டெபாசிட்) ரொக்கமாகவோ, சலான் மூலமாகவோ செலுத்தலாம். அது மட்டுமின்றி, முதல்முறையாக ஆன்லைன் மூலமாகவும் செலுத்தஇந்த ஆண்டு வசதி செய்யப்பட்டுள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாள ரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று போடிநாயக்கனூரில் வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் 3 மனுக்களையும், மாற்று வேட்பாளர் ஒரு மனுவையும் தாக்கல் செய்துள்ளனர்.

அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், வேட்பாளர் பட்டியல் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும், மாநில துணைத் தலைவராக உள்ளநயினார் நாகேந்திரன் பாஜக சார்பில் திருநெல்வேலி தொகுதியில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

மாலை 3 மணிக்கு மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், இறுதி நிலவரப்படி 58 ஆண்கள், 1 பெண் வேட்பாளர் என 59 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் ஆர்.கே.நகர் - 3, பெரம்பூர்- 1, வில்லிவாக்கம் -2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பதால் இன்றும், நாளையும் வேட்புமனு தாக்கல் இல்லை.15-ம் தேதி திங்கள்கிழமை முதல் மனு தாக்கல் விறுவிறுப்பாக நடக்கும் என தெரிகிறது. அதிமுக சார்பில் 15-ம் தேதி ஒரே நாளில் கூட்டணி வேட்பாளர்கள் உட்பட அனைவரும் வேட்புமனு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.

தமாகா மற்றும் சிறிய கட்சிகளின் வேட்பாளர்களும் அன்றைய தினமே வேட்புமனு தாக்கல் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x