

மாவட்ட தேர்தல் அதிகாரிகள்,எஸ்.பி.க்கள், வருமான வரித் துறையினருடன் தேர்தலுக்கான பொது, காவல்துறை, செலவின சிறப்பு பார்வையாளர்கள் ஆலோசனை நடத்தினர்.
தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதிநடைபெறுகிறது. வேட்புமனுத் தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், தேர்தலுக்கான அடுத்த கட்டஏற்பாடுகளை தமிழக தேர்தல் துறை மேற்கொண்டு வருகிறது. இந்த தேர்தலை பொறுத்தவரை கடந்த கால நிகழ்வுகள் அடிப்படையில் தமிழகம் செலவின கவனம் பெற்ற மாநிலமாக கருதப்பட்டு, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளான மதுமகாஜன் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு செலவின பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஏற்கெனவே தமிழகம் வந்து தேர்தல் முன்னேற்பாடுகளை ஆய்வுசெய்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று சிறப்புபொதுப் பார்வையாளர் அலோக் வர்தன், சிறப்பு காவல் பார்வையாளர் தர்மேந்திர குமார் ஆகியோர் சென்னை வந்தனர். அவர்கள், நேற்று மாலை தமிழகத்தில் உள்ள மாவட்டதேர்தல் அதிகாரிகள், காவல்துறை கண்காணிப்பாளர்கள், மாவட்டம் தோறும்நியமிக்கப்பட்டுள்ள வருமானவரித்துறை பொறுப்பு அதிகாரிகளுடன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தனர்.
இந்த ஆய்வில், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ,கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரிகள், இணை தலைமை தேர்தல் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தகவல் தெரிவிக்கலாம்
செலவினம் தொடர்பாகவும், பொது மற்றும் காவல்துறை தொடர்பாகவும் நியமிக்கப்பட்டுள்ள பார்வையாளர்களை, மது மகாஜன்(9444376337), பி.ஆர்.பாலகிருஷ்ணன் (9444376347), அலோக் வர்தன் (9444129844), தர்மேந்திரகுமார் (9444129822) ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தேர்தல்தொடர்பான தகவல்களை தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.